ஈப்போ: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கையாளும் நோக்கில் புதிய சட்டங்களை வரைய இப்போதைக்குத் திட்டங்கள் இல்லை என்று மலேசிய அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் சாங் லி காங் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க செயற்கை நுண்ணறிவு ஆளுமை, நடத்தை வழிகாட்டிகள் (Artificial Intelligence Governance and Ethics) உபயோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார் என்று பெர்னாமா ஊடகம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு ஆளுமை, நடத்தை வழிகாட்டிகளைச் செயல்படுத்துவது குறித்து தமது அமைச்சு சம்பந்தப்பட்ட தொழில்துறைத் தரப்புகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாக திரு லி காங் கூறினார். அந்த வழிகாட்டிகளுக்கு இணங்கி நடந்துகொள்வதற்கு எல்லா தரப்புகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
“(செயற்கை நுண்ணறிவு) சட்டம் எப்போது வரையப்படும் என்பது இப்போதைக்குத் திட்டமிடப்படவில்லை. ஆனால் அதுதான் எங்களுடைய இறுதி இலக்கு. அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு ஆளுமை, நடத்தை வழிகாட்டிகளை நடைமுறைப்படுத்த முடியும்.
“அதுவரை தற்போது நடப்பில் இருக்கும் தொடர்பு, பல்லூடகச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் உகந்த வேளைகளில் பயன்படுத்தப்படலாம்,” என்று அவர் வர்த்தக மாநாடு ஒன்றில் செய்தியாளர்களிடம் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ச்சியடைவதை மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு குறிப்பிடத்தக்க அளவில் லாபம் பார்ப்பதாக மலேசியாவின் தேசிய நிதிக் குற்றத் தடுப்பு நிலையத்தின் துணைத் தலைமை இயக்குநர் அகமது சஸிலீ அப்துல் கைரி கூறியதாக ஊடகங்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தன. மக்களை ஏமாற்றும் நோக்கில் ஏமாற்றுக் கும்பல்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகளைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
ஒருவேளை, செயற்கை நுண்ணறிவு விவகாரங்களில் சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவெடுத்தால் அதற்கு அடித்தளமாக விளங்க செயற்கை நுண்ணறிவு ஆளுமை, நடத்தை வழிகாட்டிகள், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன.