பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மேல்முறையீடு இல்லை: துணைத் தலைவர் ஹம்சா

பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மேல்முறையீடு இல்லை: துணைத் தலைவர் ஹம்சா

2 mins read
4589472b-3708-4e9f-ae83-7f33bbd07c76
 பெர்சத்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துணைத் தலைவர் ஹம்சா சைனுடினை (நடுவில்) நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்தனர். - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: பெர்சத்துக் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திரு ஹம்சா சைனுடின், திருத்தங்களை மேற்கொள்வதற்கும் மேம்பாட்டுக்குமான முதல் படி சீர்திருத்தம் என்று கூறியுள்ளார்.

பதவியிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து மூன்று நாள் அமைதிக்குப்பின் பேசிய திரு ஹம்சா, “சீர்திருத்தம் மேம்பாட்டுக்கான அடித்தளம். அதன்வழி ஒட்டுமொத்த பலத்தை மீண்டும் கட்டியெழுப்பி நாட்டுக்கான தெளிவான இன்னும் ஆக்கபூர்வமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்,” என்றார்.

சீர்திருத்தம் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த துணிவு, நேர்மை, விடாமுயற்சி ஆகியவை அவசியம் என்று வலியுறுத்திய அவர், “சீர்திருத்தம் என்பது கடந்த காலத்தை வருத்தத்துடன் பின்னோக்கிப் பார்ப்பது அல்ல. மாறாக, முழு நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வது,” என்றார்.

இம்மாதம் 14ஆம் தேதி நூற்றுக்கணக்கான பெர்சத்து ஆதரவாளர்களுடன் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஹம்சாவுக்கு ஆதரவு தெரிவிக்க மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தில் கூடினர்.

பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி உறுப்பினர்களும் சங்கத்தில் தமக்காக ஒன்றுகூடியதைக் கண்டு நெகிழ்ந்துபோனதாகத் திரு ஹம்சா சொன்னார்.

அதற்கு முந்தைய நாள் திரு ஹம்சா உள்பட 17 கட்சி உறுப்பினர்களைப் பெர்சத்துவின் ஒழுங்குக் குழு பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியது. கட்சிக்கும் தலைவர் முஹைதீன் யாசினுக்கும் எதிராக அவர்கள் செயல்பட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த வாரம் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 17 பேருக்குக் கட்சியிலிருந்து விலகல் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்தின்போது சம்பந்தப்பட்டோரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ஒழுங்குமுறை குழுத் தலைவர் திரு முகமது ராட்சி மனான் தெரிவித்தார்.

பெர்சத்துவின் அரசியலமைப்பை மீறியதற்காக அவர்கள் பதவியிலிருந்து விலக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கட்சி அரசியலமைப்புப்படி பதவியிலிருந்து விலக்கப்பட்டோர் கட்சியின் மேற்முறையீட்டுக் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று திரு ஹம்சா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்