வாஷிங்டன்: அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலுக்குமுன் ஈரான்மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
மாறாக, ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை அமெரிக்கா மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் இடம்பெறவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்குமுன் ஈரான்மீது புதிய தாக்குதல்கள் தொடுக்கப்படக்கூடும் என்ற ஊடகச் செய்திகளை அடுத்து எண்ணெய் விலை அதிகரித்தது.
அதன் தொடர்பில் திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷல் தளத்தில் போர் குறித்து கருத்துப் பதிவிட்டார்.
“பொருளியல் ரீதியிலும் ராணுவ ரீதியிலும் ஈரான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஈரான்மீதான தடை முழுவீச்சில் நடப்பில் இருக்கும் வேளையில் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு அதன்மீது எந்தவொரு தாக்குதலும் தொடுக்கப்படாது,” என்று திரு டிரம்ப் விளக்கம் அளித்தார்.
ஈரானைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடும்படி தற்காப்பு அமைச்சுக்கு வெள்ளை மாளிகை உத்தரவிட்டதாக இம்மாதம் 7ஆம் தேதி அட்லாண்டிக் சஞ்சிகை குறிப்பிட்டது.
நியூயார்க் டைம்ஸ் நாளேடும் அதேபோன்ற செய்தியை வெளியிட்டது.
அத்தகைய செய்திகளாலும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தாலும் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாகக் கூடியது.
அதிகரிக்கும் எரிபொருள் விலையால் அமெரிக்க வாக்காளர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக வரம்பை நிர்ணயிக்கும் பிரென்ட் நார்த் சீ கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $105.88 டாலருக்கு உயர்ந்து பின் $104.28 டாலருக்குச் சரிந்தது.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மத்திய கிழக்குப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவிருப்பதாக வாக்குறுதியளித்தார்.
ஈரானிய அதிபர் மசூத் பெஸஷ்கியானை வட்டார அளவிலான உச்சநிலைக் கூட்டத்தில் சந்தித்துப் பேசியபோது திரு புட்டின் அவ்வாறு குறிப்பிட்டார்.
போரை முடித்துவைக்க ஈரான் உண்மையாகவே பல முயற்சிகளை எடுப்பதாகத் திரு புட்டின் வலியுறுத்தினார்.
