கோலாலம்பூர்: மத்திய கிழக்கில் நடந்து வரும் போர், மோசமான சூழலை எட்டும்போது பெட்ரோல் தொடர்பான ஏற்றுமதிகளுக்குத் தடை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று மலேசியத் துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசஃப் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற பெட்ரோனாஸ் (PETRONAS) கடமைப்பட்டுள்ளதால் தற்போதைக்கு எந்த ஏற்றுமதித் தடையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வேறுவழி இல்லாத சூழலில் மட்டும்தான் பெட்ரோல் ஏற்றுமதிகளுக்கு எதிராகத் தடை விதிக்கப்படும் என்று திரு ஃபாடில்லா தெரிவித்தார்.
சனிக்கிழமை (மார்ச் 14) கூச்சிங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் துணைப் பிரதமர் ஃபாடில்லா அவ்வாறு கூறினார்.
அரசாங்கத் தரவுகள்படி மலேசியா கடந்த ஆண்டு 174.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது.
சிறந்த பொருளியல், நிதி நிலைமையால் தற்போது மலேசியா நிலையாக இருப்பதாகத் திரு ஃபாடில்லா தெரிவித்தார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருவதாக அவர் கூறினார்.
இந்நிலையில், மத்திய கிழக்கில் எழுந்துள்ள சிக்கலால் புனித ஹஜ் பயணத்திற்கான செலவுகள் கூடலாம் என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார். உள்ளூர் மற்றும் அனைத்துலக விமான நிறுவனங்களிடம் பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

