பேங்காக்: மியன்மாரில் டிசம்பர் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், அதுகுறித்து தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் ஷிகாஷக் புவாங்கெட்கியோ கருத்து தெரிவித்துள்ளார்.
மியன்மார் தேர்தல்மீது நம்பிக்கை இல்லை என்றும் அது சுதந்திரமாக நடக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது என்றும் திரு ஷிகாஷக் கூறினார். அதனால் அந்தத் தேர்தலைத் தாய்லாந்து அங்கீகரிக்காது என்றார் அவர்.
மேலும், சிறையில் அடைக்கப்பட்ட திருவாட்டி ஆங் சான் சூச்சியை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
2021ஆம் ஆண்டு மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறியது. அப்போது ஆங் சான் சூச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் மியன்மாரில் வன்முறை வெடித்தது.
மியன்மாரில் பொதுத் தேர்தலை நடத்தி ராணுவத்தை அதிகாரபூர்வமாக ஆட்சி நடத்த ராணுவத் தலைவர்கள் திட்டமிடுகின்றனர். அதற்கு ஏற்றவாறு தேர்தலைக் கட்டமைப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மியன்மாரில் வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாக நடக்கும் தேர்தலில் ராணுவம் அனுமதித்த கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. இதில் ஆங் சான் சூச்சியின் ‘என்எல்டி’ கட்சி போட்டியிட அனுமதி இல்லை.

