மலாக்கா நீரிணைத் தொடர்பாக எந்த நாடும் தனித்து முடிவெடுக்கமுடியாது: மலேசியா

மலாக்கா நீரிணைத் தொடர்பாக எந்த நாடும் தனித்து முடிவெடுக்கமுடியாது: மலேசியா

2 mins read
3c1b3744-6cf8-40cf-aa2f-d09eaf383424
900 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலாக்கா நீரிணை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பொதுவாக உள்ளது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் குறிப்பிட்டார்.  - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலாக்கா நீரிணைத் தொடர்பாக எந்த நாடும் தனித்து முடிவெடுக்கமுடியாது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்தோனீசிய நிதி அமைச்சர் பர்பாயா யூதி சதேவா புதன்கிழமை (ஏப்ரல் 22) ஜகார்த்தாவில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் மலாக்கா நீரிணைத் தொடர்பாகப் பேசினார்.

“மலாக்கா நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு இந்தோனீசிய வரி வசூலிக்கலாம்,” என்று அவர் சர்ச்சைக்கு வழிவகுக்கும் வகையில் கூறினார்.

அதற்கு பதிலடி தரும் விதமாக மலேசிய அமைச்சர் ஹசான், கோலாலம்பூரில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடலில் பேசினார்.

900 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலாக்கா நீரிணை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பொதுவாக உள்ளது என்று திரு ஹசான் குறிப்பிட்டார்.

“மலாக்கா நீரிணைத் தொடர்பாக எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதில் நான்கு நாடுகளின் பங்கும் இருக்கும். எந்த நாடும் தனித்து முடிவெடுக்கமுடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“நீரிணையில் சுற்றுக்காவல், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களைக் குறிப்பிட்டு நான்கு நாடுகளும் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதனால் எந்த நாடும் அதன் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்க முடியாது,” என்றும் அமைச்சர் ஹசான் நினைவூட்டினார்.

மத்திய கிழக்கில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடக்கும் போரால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக கலந்துரையாடல் நடந்தபோது திரு ஹசான் இந்தோனீசிய அமைச்சரின் கருத்துக்குப் பதிலளித்தார்.

திரு பர்பாயா, “ஈரான் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு வரிவிதிக்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல், மலாக்கா நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கும் நாடுகள் வரி வசூலிக்கலாம்,” என்றார் அவர். பின்னர் அவர் அந்தக் கருத்திலிருந்து பின்வாங்கினார்.

மலாக்கா நீரிணையில் நாள் ஒன்றுக்கு 200க்கும் அதிகமான கப்பல்கள் செல்கின்றன. கிட்டத்தட்ட ஆண்டுக்கு 90,000 கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் செல்கிறது.

நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு வரி வசூலிக்கக்கூடாது என்பதில் சிங்கப்பூர் உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்