தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா: எரிபொருளுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவுள்ள வெளிநாட்டவர்கள்

2 mins read
c8b9a883-f72e-4742-a0a7-c78cbe66d132
இந்தப் புதிய மாற்றத்தால் பெரும்பாலான மலேசியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவில் இனி வெளிநாட்டவர்கள் எரிபொருளுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எரிபொருள் கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளார் அதனால் இந்த விலை ஏற்றம் அமலுக்கு வருகிறது.

மலேசியாவில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் வெளிநாட்டவர்கள் உள்ளனர். அவர்கள் ஏறத்தாழ 912 மில்லியன் வெள்ளி மதிப்பிலான எரிபொருள் மானியத்தை அனுபவிக்கின்றனர்.

“எரிபொருள் விலையை அதிகரிக்கக் கூறி பல கருத்துக்கள் முன்னவைவைக்கப்பட்டன. அதேபோல் மலேசியர்களுக்கு மானியம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது,” என்றார் திரு அன்வார்.

“அனைவருக்கும் விலை ஏற்றம் செய்ய முடியாது. அதனால் மலேசியாவில் உள்ள 5 விழுக்காடு பெரும் செல்வந்தர்கள் மற்றும் வெளிநாட்டவர்களைக் குறிவைத்து புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

இதனை கெஅடிலான் ராக்யாட் கட்சி (பிகேஆர்) மாநாட்டில் தெரிவித்தார் திரு அன்வார்.

இந்தப் புதிய மாற்றத்தால் பெரும்பாலான மலேசியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உலகிலேயே எரிபொருளுக்கு அதிக மானியம் தரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்றும் அவர் நினைவூட்டினார்.

இந்நிலையில், மலேசிய அரசாங்கம் அதன் உள்நாட்டு வருவாய் வாரியம் நடைமுறைப்படுத்திய இணைய விலை மதிப்பீட்டை ( e-invoice) மறு ஆய்வு செய்யவுள்ளதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இது நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டர்.

மலேசிய அரசாங்கம் இணைய விலை மதிப்பீட்டைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தியது.

முதலாம் கட்டத்தில் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் அதைப் பின்பற்ற வேண்டும்.

இரண்டாம் கட்டத்தில் 25 மில்லியன் ரிங்கிட் முதல் 100 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் இணைய விலை மதிப்பீட்டைப் பின்பற்ற வேண்டும். அது இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கியது.

மூன்றாம் கட்டத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர அளவில் செயல்படும் நிறுவனங்களுக்கு இணைய விலை மதிப்பீட்டைப் பின்பற்ற வேண்டும். அது வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது.

குறிப்புச் சொற்கள்