எரிபொருள் விலை உயர்வு இல்லை; செலவுகளை அரசே சுமக்கும்: அன்வார்

எரிபொருள் விலை உயர்வு இல்லை; செலவுகளை அரசே சுமக்கும்: அன்வார்

2 mins read
91993ae6-c7db-46cf-923a-286b56ab2049
ஒரு லிட்டர் ஆர்ஓஎன்95 பெட்ரோல் விலை 1.99 ரிங்கிட் என்பது உலகின் ஆகக் குறைந்த விலைகளில் ஒன்று என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். - படம்: ஏஎஃப்பி

சுங்கை பட்டாணி: உலகளாவிய விநியோக நெருக்கடியை நாடு எதிர்நோக்கி இருக்கும் வேளையில் எரிபொருள் விலைகளை உயர்த்தும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மக்களுக்குச் சுமை ஏற்படுவதைத் தவிர்க்க, ஒவ்வொரு மாதமும் எரிபொருள் மானியங்களுக்கு ஆகும் செலவை ஈடுசெய்ய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று திரு அன்வார் கூறினார்.

“மாதம் ஒன்றுக்கு நம்மால் எவ்வளவு தொகையைச் செலுத்த முடிந்தது. பழைய ஒதுக்கீட்டின்படி அல்ல; எண்ணெய் விலை உயர்ந்தபோது, ​​அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 5 பில்லியன் ரிங்கிட், 3 பில்லியன் ரிங்கிட் என செலுத்தியது.

“பின்னர் அது மாதம் 7 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது. இப்போது 4 பில்லியன் ரிங்கிட்டாகக் குறைந்துள்ளது,” என்று திரு அன்வார் தெரிவித்தார்.

சுங்கை பட்டாணியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) ‘மதானி ரக்கான் மூடா’ திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

“அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 3 பில்லியன் ரிங்கிட்டை பத்து மாத காலத்திற்கு மானியச் செலவுகளுக்காக ஒதுக்கினால், அது மொத்தமாக 30 பில்லியனாகிவிடும்.

“இது பெரிய தொகையாக இருந்தாலும் தேசிய நிதி வெளியாவதைத் தடுப்பதுடன், சிக்கன நடவடிக்கைகள் மூலமாகவும் அரசாங்கத்தால் அதனை ஈடுசெய்ய முடியும்,” என்றார் திரு அன்வார்.

எண்ணெய் மானியங்களுக்கு ஆகும் செலவை அரசாங்கம் தொடர்ந்து ஈடுகட்ட கடன் வாங்கலாம் என்று சில அரசியல் கட்சிகள் தெரிவித்த யோசனையை அவர் நிராகரித்தார்.

“பதவியில் இருக்கும் நான் இப்போது கடன் வாங்க முடியும். ஆனால் நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிறகு, அதன் சுமையை எனக்குப் பிறகு வருபவர்கள் சுமக்க வேண்டியிருக்கும். அதனால்தான் கடன் வாங்குவது தீர்வாகாது என முடிவெடுத்து எங்களால் இயன்றதைச் செய்து வருகிறோம்,” என்று திரு அன்வார் விளக்கினார்.

ஒரு லிட்டர் ஆர்ஓஎன்95 பெட்ரோல் விலை 1.99 ரிங்கிட் என அரசாங்கம் நிர்ணயித்திருப்பது உலகின் ஆகக் குறைந்த விலைகளில் ஒன்று எனவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்