சிட்னி: ஆஸ்திரேலிய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வாரயிறுதியில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்தவர்களை உயிருடன் மீட்பதற்கான நம்பிக்கையை அதிகாரிகள் இழந்துவிட்டதாக நாட்டின் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறியுள்ளார்.
அந்த ஹெலிகாப்டர் பேரளவில் நடத்தப்பட்ட தலிஸ்மான் சேபர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000 ராணுவ அதிகாரிகள் அந்தப் பயற்சியில் கலந்துகொண்டனர்.
விபத்தைத் தொடர்ந்து குறைந்தது நால்வர் மாண்டுபோயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்த எம்ஆர்எச்-90 தைப்பான் ரக ஹெலிகாப்டரில் உள்ள பணியாளர்களைத் தேட, குறைந்தது மூன்று நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர், காவல்துறையினருடன் இணைந்து தேடல், மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பணிகள் தொடரும் என்று ஆஸ்திரேலியத் தற்காப்புப் படைத் தலைவர் அங்கஸ் கேம்பெல் தெரிவித்துள்ளார்.

