கோலாலம்பூர்: மலேசியத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், அந்நாட்டுத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி மீது கூடுதலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
ஊழல் தொடர்பான விசாரணையை எதிர்கொண்ட திரு ஸாஹிட் மீது குற்றம் சுமத்தப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அது சொன்னது.
அதையடுத்து மத்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய சட்டங்களின்கீழ் திரு ஸாஹிட் மீதான வழக்கு முடிவுக்கு வருகிறது என்று அலுவலகம் வியாழக்கிழமை (ஜனவரி 8) அறிக்கை வெளியிட்டது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தில் முக்கியக் கட்சியாக அங்கம் வகிக்கும் அம்னோ கட்சியைத் திரு ஸாஹிட் வழிநடத்துகிறார்.
திரு அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று உள்கட்சி நெருக்கடி வலுத்துவரும் நிலையில் அடுத்த தேர்தல் வரை அம்னோ கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் என்று திரு ஸாஹிட் இதற்குமுன் கூறியிருந்தார்.
தமது குடும்பத்துக்குச் சொந்தமான அறநிறுவனம் தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, நம்பிக்கைத் துரோகம், ஊழல் ஆகியவை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் திரு ஸாஹிட் எதிர்கொண்டார்.
2023ஆம் ஆண்டு அவர் அந்த வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். ஒருவேளை புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அவர் மீது அதே 47 குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக, திரு ஸாஹிட்டின் வழக்கில் தாம் தலையிடவில்லை என்று பிரதமர் அன்வார் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதம் 14ஆம் தேதி அம்னோ கட்சி நான்கு நாள் வருடாந்தர பொதுக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது. அதில் ஆளும் கூட்டணியைவிட்டு விலகுவது குறித்த விவகாரம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


