பெர்சத்து கட்சியுடன் சமரசப் பேச்சுக்கு இனி வாய்ப்பில்லை: பாஸ்

பெர்சத்து கட்சியுடன் சமரசப் பேச்சுக்கு இனி வாய்ப்பில்லை: பாஸ்

2 mins read
6b5a9c64-82ec-4915-8d79-d8e10e993267
பாஸ் கட்சித் தலைவரும் மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ஹாடி அவாங். - படம்: பெரித்தா ஹரியான்
Google News Preferred Icon

மாராங்: பெர்சத்து கட்சியுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் இனி இல்லை என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில், பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு எதிராக பெர்சத்து கட்சி வேட்பாளர்களைக் களமிறக்கியதே இரு கட்சிகளுக்கும் இடையிலான பிளவுக்கு முதன்மைக் காரணம் என்று அவர் கூறினார்.

மேலும், வரவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகப் பெர்சத்து தலைவர்கள் சிலர் வெளியிட்ட அறிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) திரங்கானுவில் உள்ள பள்ளிவாசலில் சிறப்பு உரை ஆற்றிய பிறகு, செய்தியாளர்களிடம் மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் ஹாடி அவாங் பேசினார்.

“நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சி பாஸ் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டது. அத்துடன், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைய விரும்புவதாகவும் அது அறிக்கைகளை வெளியிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்தார். இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவின் நிலை மற்றும் எதிர்கால திசைவழி குறித்த விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு, சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, பெர்சத்து கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவர பாஸ் கட்சி கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி முடிவு செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில், பெரிக்கத்தான் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளில் தாங்கள் சேர்க்கப்படவில்லை எனக் கூறி, பெர்சத்து கட்சி தனது சொந்தச் சின்னத்திலேயே போட்டியிட்டது.

இதனிடையே, வரவிருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒத்தக் கருத்துடைய எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மலாக்கா பெர்சத்து கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ஹிஷாமுதீன் அப்துல் கரீம் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமலாக்காதேர்தல்பாஸ் கட்சிபெர்சத்து