பீதியில் பொருள்களை வாங்கிக் குவிக்கத் தேவையில்லை: மலேசிய அமைச்சு

பீதியில் பொருள்களை வாங்கிக் குவிக்கத் தேவையில்லை: மலேசிய அமைச்சு

2 mins read
482df13a-a2f9-4d18-9bc1-7b1b069dbfc2
பொருள்களின் விலை, கையிருப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக மலேசிய உள்நாட்டு வணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது. - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நீடித்தாலும் அத்தியாவசியப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவிலும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதாக மலேசியாவின் உள்நாட்டு வணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனால், மக்கள் பதற்றத்தில் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று அது கேட்டுக்கொண்டுள்ளது.

பொருள்களின் விலை, கையிருப்பு குறித்து அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சின் கோலாலம்பூர் தலைமை அமலாக்க அதிகாரி முகம்மது ஷஹ்ரான் முகம்மது அர்ஷாத் கூறியுள்ளார்.

“அன்றாடம் தேவைப்படும் பொருள்களின் விநியோகம் போதுமான அளவிலும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதை உறுதிப்படுத்தி வருகிறோம். கோலாலம்பூரின் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பொருள் விநியோகம் சீராக இருப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து விரிவான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) ஓர் அறிக்கை வழியாக அவர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் முழுவதும் பொருள்களின் விலையையும் கையிருப்பையும் கண்காணிக்க அமலாக்க அதிகாரிகள் 168 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அத்தியாவசியப் பொருள்கள் சந்தையில் எளிதில் கிடைப்பதை உறுதிசெய்ய, சில்லறை, மொத்த விற்பனையாளர்களுடன் தமது அலுவலகம் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் திரு முகம்மது ஷஹ்ரான் தெரிவித்தார்.

அத்துடன், முக்கிய நெடுஞ்சாலைகள், நகர மையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பெட்ரோல், டீசல் போதுமான அளவு இருப்பதை உறுதிசெய்ய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுடன் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

“கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் தொடர்பில் முறைகேடு நடப்பதைத் தடுக்க, ஒருங்கிணைந்த ‘ஆப்ஸ் தீரிஸ் 4.0’ (Ops Tiris 4.0) நடவடிக்கையின்கீழ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்,” என்று திரு முகம்மது ஷஹ்ரான் கூறினார்.

தேவையற்ற கவலையை ஏற்படுத்தக்கூடிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ பரப்பவோ வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்