சிங்கப்பூருக்கு விற்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜோகூரின் தொழில்மய வளர்ச்சிக்கு 2030ஆம் ஆண்டுக்கு அப்பாலும் வெளிநாட்டிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது என்று மலேசியா கூறியுள்ளது.
“சுத்திகரிக்கப்படாத தண்ணீர் விலையை மறு ஆய்வு செய்ய வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.
டிசம்பர் 2ஆம் தேதி பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரிம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
“தண்ணீர் விலையைப் பரிசீலிப்பதற்கு முன்பு அதனால் ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். சிங்கப்பூரிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வாங்குவது ஜோகூருக்கு மிக முக்கியம்,” என்று அமைச்சர் அக்மல் குறிப்பிட்டார்.
எந்தவொரு நடவடிக்கையும் மக்களுக்குப் பிரச்சினையாகிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் கவனமாக, எச்சரிக்கையுடன் அணுகுவதாகவும் அவர் கூறினார்.
“தண்ணீரில் தன்னிறைவை அடைவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருந்தாலும் சிங்கப்பூரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஜோகூர் மாநிலத்திற்கு இன்னும் தேவை,” என்று துணை அமைச்சர் மேலும் கூறினார்.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வாங்குவதைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் அதே வேளையில், ஜோகூரில் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோகத்தை அதிகரிக்கும் முயற்சியில், மலேசியா அறவே சாந்திருக்காத (Zero Dependency) திட்டத்தையைச் செயல்படுத்தியுள்ளது என்று திரு அக்மல் கூறினார்.
ஜோகூர் ஆற்றின் (சுங்கை லெபாக்), கோத்தா திங்கியில் அமைந்துள்ள சுங்கை செடிலி பெசாரில் ஓர் அணைக்கட்டு மற்றும் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டுதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது, சிங்கப்பூரில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 16 மில்லியன் கேலன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஜோகூர் இறக்குமதி செய்கிறது.

