புத்ரஜெயா - பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில் உள்ள நீருற்றைச் சுற்றி அதிகமான புறாக்கள் மாண்டு கிடந்தது கண்டறியப்பட்டதை அடுத்து புதிய தொற்றுநோய்ச் சம்பவங்களோ மரணங்களோ கண்டறியப்படவில்லை என்று கால்நடைச் சேவைகள் பிரிவு வியாழக்கிழமை (மே 8) உறுதிபடுத்தியுள்ளது.
மாண்டுகிடந்த மூன்று புறாக்களின் உடலில் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவற்றின் கல்லீரல் நிறம் மாறியிருந்ததும் நெஞ்சுப் பகுதியில் ரத்தக்கட்டிகளும் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மூச்சுக்குழாயிலும் நுரையீரலிலும் ரத்தக் கசிவுகள் இருந்தன.
“தொடக்கக் கட்ட விசாரணையின் முடிவுகள் புறாக்களிடம் பறவைக் காய்ச்சலோ நியூகாஸ்டல் நோயோ இல்லை என்பதை உறுதிபடுத்தியது. அவற்றின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய வேதியியல் பிரிவு நச்சுக்கான சோதனைகளை நடத்துகிறது,” என்று கால்நடைச் சேவைகள் பிரிவு குறிப்பிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களின் பாதுகாப்பையும் நாட்டின் கால்நடைகளின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த பாடாங் ஈப்போவில் உள்ள நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிப்பதாக அது குறிப்பிட்டது.
பிரபல பாடாங் ஈப்போவில் உள்ள நீருக்கு அருகே அதிகமான புறாக்கள் மாண்டுகிடப்பதைக் காட்டும் பல்வேறு காணொளிகள் சமூக ஊடகத் தளங்களில் பரவிவருகின்றன.