மின்சாரக் கட்டணங்களை உயர்த்த திட்டமில்லை: தைவான்

மின்சாரக் கட்டணங்களை உயர்த்த திட்டமில்லை: தைவான்

2 mins read
356dd451-f66d-491d-837b-14b9f6faf5cd
தைவானின் அணுமின் நிலையம் மீண்டும் செயல்படுத்துவதற்கான கோரிக்கையைத் தைபவர் நிறுவனம் அணுசக்தி பாதுகாப்பு ஆணையத்திடம் முன்வைக்கவிருக்கிறது. - படம்: தைவான் நியூஸ்

தைப்பே: மத்திய கிழக்கில் நீடிக்கும் போரால் எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ளபோதும் மின்சார விலைகளைத் தற்போதைக்கு அதிகரிப்பதாக இல்லை என்று தைவான் தெரிவித்துள்ளது.

அனைத்துலக எரிசக்தி விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளபோதும் அதிகமான மானியங்களை வழங்கி கட்டண அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயல்வதாகத் தைவானியப் பொருளியல் அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 27) குறிப்பிட்டது.

மத்திய வங்கி பணவீக்கத்துக்கான உச்சவரம்பை 2 விழுக்காடாக நிர்ணயித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுக்கான அதிநவீன பகுதிமின்கடத்திகளை உற்பத்திசெய்யும் ஆகப் பெரிய நாடான தைவான், கடந்த 10 மாதங்களாக மத்திய வங்கியின் உச்சவரம்புக்குள் அதன் பணவீக்கத்தை வைத்துள்ளது.

மத்திய கிழக்குப் போர் எவ்வளவு காலம் நீடிக்கிறது, எவ்வளவு மோசமாகிறது என்பன போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தைவானின் பொருளியலில் பாதிப்புகள் ஏற்படும் என்று மத்திய வங்கி சொன்னது.

எனினும், தைவானின் பொருளியல் பொதுவாக இந்த ஆண்டு நிலையாக இருக்கும் என்று அது சுட்டியது.

தைபவர் (Taipower) என்ற அரசாங்கப் பயனீட்டு நிறுவனத்தின் கட்டணங்கள் குறித்து பேச பொருளியல் அமைச்சின் மின்சாரக் கட்டண மறுஆய்வுக் குழு ஒவ்வொரு மார்ச், செம்டம்பர் மாதங்களில் ஒன்றுகூடுவது வழக்கம்.

இந்நிலையில், மத்திய கிழக்குப் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய்க்கும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவுக்கும் தைவான் அமெரிக்காவை நாடத் தொடங்கியது.

எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய தைவான் அணுவாற்றலையும் பயன்படுத்துவது குறித்து யோசிப்பதாகத் தெரிவித்தது.

தைவானின் கடைசி அணுமின் நிலையம் கடந்த ஆண்டுடன் அதன் கதவுகளை மூடியது.

இந்நிலையில், அதை மீண்டும் செயல்படுத்துவதற்கான கோரிக்கையை ‘தைபவர்’ நிறுவனம் அணுவாற்றல் பாதுகாப்பு ஆணையத்திடம் முன்வைக்கவிருப்பதாகச் சொன்னது.

குறிப்புச் சொற்கள்