தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சனிக்கிழமைகளில் நெகிழிக்குத் தடை விதித்துள்ள மலேசிய நகரம்

1 mins read
0df9f810-87df-47eb-819e-e7c776654e1b
படம்: ஏஎஃப்பி -

'நெகிழிப்பை வேண்டாம்' எனும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மலேசியாவின் ஈப்போ நகர மன்றம் தொடங்கியிருக்கிறது.

அதன்படி, வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் கடைகளில் நெகிழிப்பைக்கு 20 காசு கட்டணம் வசூலிக்கப்படும்.

சுற்றுச்சூழலைக் காக்கும் விதமாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப்பை பயன்பாட்டைக் குறைப்பதே இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் இலக்கு என்று ஈப்போ மேயர் ருமைஸி பகாரின் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் இம்மாதம் 18ஆம் தேதி ஈப்போ நகர மன்றத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு 120 வணிகர்களுடன் கலந்தாலோசனை நடத்தியது. அவர்களில் 22 பேர் தங்களின் வணிகப் பகுதியை நெகிழிப்பை இல்லா இடமாகப் பதிவுசெய்துகொண்டனர்.

"இருபது காசு வாங்கிக்கொண்டு நெகிழிப்பை வழங்கும் கடைகளுக்கு 'நெகிழிப்பை இல்லா நாள் வளாகம்' என்ற சான்றிதழும் நெகிழிப்பை வழங்காத கடைகளுக்கு 'நெகிழிப்பை இல்லா வளாகம்' என்ற சான்றிதழும் வழங்கப்படும்," என்றார் திரு ருமைஸி.

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப்பையை முற்றிலுமாக ஒழிக்க ஈப்போ நகர மன்றம் இலக்கு கொண்டுள்ளது.

இந்த விழிப்புணர்வுப் பிரசாரம் வெற்றிகரமாக நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், எல்லா வணிக நிறுவனங்களும் நெகிழிப்பை தொடர்பான தங்களது சான்றிதழை காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெகிழிப்பைக் கட்டணம் மூலம் சேரும் தொகை ஈப்போ நகர மன்றத்திடம் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கும் அத்தொகை பயன்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்