பிரதமர் அன்வாருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை: ஸாஹித் ஹமிடி

பிரதமர் அன்வாருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை: ஸாஹித் ஹமிடி

2 mins read
6508c48e-7d6f-4295-aa1b-4f1921c7170e
தமக்கும் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் இடையே பிளவு இருப்பதாகக் கூறப்படுவதை மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடி மறுத்துள்ளார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இஸ்கந்தர் புத்ரி: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் தமக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் புகார்களைத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.

“தனிப்பட்ட முறையிலோ, அதிகாரபூர்வ அடிப்படையிலோ அன்வாருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்றார் அவர்.

ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருக்கும் தேசிய முன்னணிக்கு இந்த ஆட்சிக்காலம் முடியும்வரை ஆதரவளித்து, நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்வதே முக்கியம் என்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) நடைபெற்ற தேசிய ஒராங் அஸ்லி விளையாட்டுத் திருவிழாவில் ஸாஹித் தெரிவித்தார்.

அன்வாருடனான அவரது உறவு சீர்குலைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்தி அறிக்கை ஒன்று கூறியது குறித்து கருத்து கேட்கப்பட்டபோதே கிராமப்புற, வட்டார வளர்ச்சி அமைச்சருமான திரு ஸாஹித் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க முடிவுகள் தொடர்ந்து தொழில்முறை ரீதியாகவே எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

“அமைச்சரவைக் கூட்டங்களிலும் அதிகாரபூர்வ நிகழ்வுகளிலும் நாங்கள் இருக்கும்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதே உண்மை. தொழில்முறையாக முடிவுகளை எட்டுகிறோம்,” என்று கூறிய அவர், இந்த ஆட்சிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்திலேயே நீடிப்பது என்று அம்னோ கட்சிப் பொதுக்குழு தீர்மானம் செய்துள்ளதையும் சுட்டினார்.

பிரதமர் வேட்பாளர்

இதனிடையே, நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவருமான திரு ஸாஹிட் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் வேட்பாளரை இப்போதே முடிவுசெய்ய வேண்டிய தேவையில்லை. இப்போதைக்கு அதுபற்றிப் பேசவும் வேண்டியதில்லை.

“இப்போது, மலாக்கா மாநிலத் தேர்தலிலேயே கவனம் செலுத்த வேண்டும். தேசிய அரசியல் சார்ந்த விஷயங்கள் குறித்துப் பின்னர் ஆலோசனை செய்யலாம்,” என்று அவர் சொன்னார்.

முன்னதாக, அடுத்த பொதுத் தேர்தலில் தங்களது கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
அன்வார் இப்ராகிம்அம்னோமலேசியா