மணிலா: தான் பதவி விலக வாய்ப்பில்லை என்று பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுடார்ட்டே வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) கூறியுள்ளார்.
அரசியல் பொறுப்பில் இருந்தபோது தவறு இழைத்ததாக அவர்மீது நீதிமன்ற விசாரணை நடத்தும் இவ்வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கப்படாத சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படுவதையடுத்து நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவருகிறது.
பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டேயின் மகளான சாரா டுடார்ட்டே, 2028ஆம் ஆண்டில் அடுத்த பிலிப்பீன்ஸ் அதிபராகப் பொறுப்பேற்க முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
“பதவி விலகலுக்கு அறவே வாய்ப்பில்லை,” என ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் ஊடகங்களுடன் நடந்துவரும் சந்திப்பின்போது திருவாட்டி டுடார்ட்டே குறிப்பிட்டார்.
“நான் பதவி விலகினால் அது, எனக்காக வாக்களித்த 32.2 மில்லியன் மக்கள் மட்டுமின்றி மொத்தமாகவே பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதாகும். அதனால் என்னால் பதவி விலக முடியாது,” என்றார் அவர்.
தெரிவிக்கப்படாத சொத்துகளை அவர் சேர்த்ததாகக் கூறப்படுவதில் மட்டும் பிலிப்பீன்ஸ் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கவனம் செலுத்திவருகின்றனர். மற்ற மூன்று குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன. 2028ஆம் ஆண்டு தேர்தல்மீது கவனம் திரும்புவதற்கு முன்பு நீதிமன்ற விசாரணையை இவ்வாண்டிறுதிக்குள் முடிப்பது நோக்கமாகும்.
தான் தவறு இழைக்கவில்லை என்று திருவாட்டி டுடார்ட்டே கூறிவந்துள்ளார். இந்த நீதிமன்ற நடவடிக்கை, தனக்கு அளிக்கப்படும் அரசியல்ரீதியான துன்புறுத்தல் என்றும் அவர் சாடியுள்ளார்.
