சமய வெறுப்பு, வன்முறைக்கு இடமில்லை: மலேசிய அமைச்சர்

சமய வெறுப்பு, வன்முறைக்கு இடமில்லை: மலேசிய அமைச்சர்

படம்: த ஸ்டார்

10 Mar 2026 - 2:40 pm

2 mins read

புத்ராஜெயா: மலேசியா போன்ற பல இனங்களும் பல சமயங்களும் இணைந்து வாழும் நாட்டில் சமய வெறுப்பு, தூண்டுதல், வெறுப்புணர்வு அல்லது சமூக மற்றும் சமய உணர்வுகளைக் காயப்படுத்தும் எந்தவொரு வன்முறைச் செயல்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அந்நாட்டின் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நிகழ்ந்த மூன்று சம்பவங்களைத் தேசிய ஒற்றுமை அமைச்சு மிகவும் கவலைக்கிடமாகக் கவனித்துள்ளதாகக் கூறினார். இந்தச் சம்பவங்கள் நாட்டின் சமூக ஒற்றுமையையும் அமைதியையும் பாதிக்கக்கூடியவை என்றும் அவர் எச்சரித்தார்.

“நாட்டின் அமைதியைக் குலைக்க முயற்சி செய்யும் தீவிரவாத மனப்பான்மை உடையவர்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் காண காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி, தற்போதுள்ள சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் சமூக ஆர்வலராக அறியப்படும் ‘செகு சந்திரா’ என்பவரின் வாகனம் சில பொறுப்பற்ற நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளியில் ஒருவர் இந்து மதத்தின் புனிதச் சின்னமான திரிசூலத்தைக் காலால் மிதித்து சேதப்படுத்துவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களிடையே பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் சமய நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்