கோலாலம்பூர்: பெர்சத்து கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தன்னிச்சையானதன்று என்று அக்கட்சியின் தலைவர் கைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை, கட்சி அரசியலமைப்பின் ஒரு பகுதி என்ற அவர், கட்சி நிலையாக, வலுவுடன் இருப்பதை உறுதிசெய்ய அது தேவை என்றார்.
“நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர் சந்திப்பு, கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. சமரசத்திற்கான வழியைக் கண்டுபிடித்து கட்சியைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், எவ்விதப் பயனும் இல்லை,” என்று அவர் கூறினார்.
பெர்சத்து கட்சியின் தலைவராகவும் நிறுவனராகவும் கட்சி வலுவாக இருப்பதையும் அதன் உண்மையான போராட்டப் பாதையில் பயணிப்பதையும் உறுதிசெய்யும் கடப்பாடு தமக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை (பிப்ரவரி 14) நடந்த உச்சமன்றச் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதற்கிடையே, பெர்சத்து கட்சியிலிருந்து டாக்டர் சோங் ஃபாட் ஃபுல் விலகியதை அடுத்து, கட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் வெளியேறுவதாகச் சொல்லப்படுவதற்கு ஆதாரமில்லை என்று கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் ஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கட்சியில் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளதை அவர் மறுத்தார்.
“மூன்றில் ஒரு பங்கு அல்லது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள் என்றால், அதற்கான எண்ணிக்கையையும் பெயர்களையும் எங்களிடம் காட்டுங்கள். இதுவரை, இவை வெறும் ஆதாரமற்ற கதைகளாகவே உள்ளன,” என்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், டாக்டர் சோங்கிடமிருந்து இதுவரை அதிகாரபூர்வப் பதவி விலகல் கடிதம் வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
17 உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையானது கட்சியின் அரசியலமைப்பிற்கு இணங்க ஒழுங்கு வாரியத்தால் ஆய்வு செய்யப்பட்ட புகார்கள், ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக பெர்சத்துவின் இணைப் பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் தெரிவித்தார். ஒழுக்கத்தைப் பேணவும் கட்சியின் நிலைப்பாடுகளைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றார் அவர்.
உச்சமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் கட்சித் தலைவர் முகைதீன் யாசினுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதற்காக எந்தப் பட்டியலும் தயார் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் விடுத்த அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த சஞ்சீவன், ஹம்சா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெர்சத்து சார்பில் பேசுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்றார்.
“அவர் இனி உறுப்பினரோ அல்லது துணைத் தலைவரோ அல்ல. அவர் புதிய கட்சியைத் தொடங்கினாலும் அல்லது வேறு கட்சியில் சேர்ந்தாலும் அது அவருடைய உரிமை. பெர்சத்துவைப் பொறுத்தவரை கட்சியின் முடிவே இறுதியானது,” என்றார்.

