மலேசிய விரைவுச்சாலைகளில் தீபாவளிக்காக சுங்கக் கட்டணம் இல்லை

1 mins read
63bc7f6d-e3ef-46bd-aa09-41ce4b61cb48
சலுகையை அளிக்க அரசாங்கத்திற்கு 38 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஊடகம்

கோலாலம்பூர்: தீபாவளியை முன்னிட்டு மலேசியாவின் விரைவுச்சாலைகளில் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் வாகனங்களுக்கான அந்தச் சலுகை, செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின், அதாவது 12.10 மணியிலிருந்து தொடங்கி புதன்கிழமை இரவு 11.59 வரை நீடிக்கும்.

இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் நன்டா லிங்கி தெரிவித்தார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை (அக்டோபர் 28) அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார்.

“விரைவுச்சாலையைப் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக தீபாவளியைக் கொண்டாடும் இந்து சமூகத்தினருக்கு சலுகை அளிக்கும் விதமாக அக்டோபர் 29, 30 தேதிகளில் சுங்கக் கட்டணமற்ற பயணத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்து உள்ளது.

“மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையைக் கவனத்தில் கொண்டு இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

“எல்லா விரைவுச்சாலைகளிலும் நடப்புக்கு வரும் இந்தச் சலுகை சொந்த வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும்.

“அதேநேரம், நாட்டின் எல்லைப்புற விரைவுச்சாலைகளுக்கு சலுகை பொருந்தாது.

“வடக்கு தெற்கு விரைவுச்சாலையில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடம், ஜோகூரில் உள்ள மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலத்திற்கான ஜோகூர் விரைவுச்சாலையிலுள்ள தஞ்சோங் கூப்பாங் ஆகியவற்றில் உள்ள சுங்கக் கட்டண மையங்களில் எப்போதும் போல கட்டணம் வசூலிக்கப்படும்,” என்று அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சலுகை மூலம் அரசாங்கத்திற்கு 38 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்