பிரபல தாய்லாந்து பெளத்த ஆலய வளாகத்தில் திருமண நிகழ்வுகளுக்குத் தடை

பிரபல தாய்லாந்து பெளத்த ஆலய வளாகத்தில் திருமண நிகழ்வுகளுக்குத் தடை

1 mins read
405836ae-a16c-4339-b2da-63440e9e2949
வாட் ராஜாபொப்பிட் பெளத்த ஆலயம். - படம்: www.resource.lib.su.ac.th / இணையம்
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஃபிரா நாக்கோன் வட்டாரத்தில் இருக்கும் வாட் ராஜாபொப்பிட் பெளத்த ஆலயத்தின் வளாகத்தில் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆலய வளாகத்தில் திருமணச் சடங்கு நடத்துவது, வர்த்தகச் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையப் பதிவுகளுக்காக வாட் ராஜாபொப்பிட் ஆலயத்தைப் பின்னணியாகப் பயன்படுத்தியதால் இடையூறுகள் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தாய் பிபிஎஸ் (Thai PBS) ஊடகம் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 17) தெரிவித்தது.

தாய்லாந்து மாமன்னர் மாளிகைக்கு அருகே அமைந்துள்ள வாட் ராஜாபொப்பிட், மன்னர் சுலாலொங்கோர்ன் (ஐந்தாம் ராம மன்னர்) காலத்தில் கட்டப்பட்டது. அந்த ஆலயத்தின் சமயத் தலைவர் பொறுப்பை வகிப்பவர் தலைமை மதகுருவான ஃபிரா அறியாவொங்சகாத்தனானா.

இத்தாலிய பாணியிலான உட்புறப் பகுதிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ள வாட் ராஜாபொப்பிட், சுற்றுப் பயணிகளைடையே பிரபலமாக இருந்து வருகிறது.

அனுமதியுடன் ஆலய வளாகத்தில் பெளத்த சமயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு வருகை தருவோர் ஏற்பாடு செய்யலாம் என்று வாட் ராஜாபொப்பிட் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. அதேவேளை, திருமணங்கள், பதிவுத் திருமணங்கள், மோதிரம் மாற்றிக்கொள்வது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆலயம் குறிப்பிட்டது.

மேலும், பொருள்களையும் சேவைகளையும் விளம்பரப்படுத்துவது போன்ற வர்த்தகச் செயல்களில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆலயம் விவரித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்