ஜோகூர் பாரு: மலேசியாவில் ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை (ஜூன் 27) காலை 10 மணியுடன் நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் செயல்பட்ட 56 வேட்புமனு நிலையங்களும் மூடப்பட்டன.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய காலை 9 மணியிலிருந்து அந்த நிலையங்கள் செயல்பட்டன. அடுத்து, தகுதிபெறும் வேட்பாளர்களின் அதிகாரபூர்வ அறிவிப்புமீது அனைவரின் கவனமும் உள்ளது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 14 நாள்களுக்குப் பிரசாரம் தொடங்கும். ஜூலை 10ஆம் தேதி இரவு 11.59 மணிவரை பிரசாரங்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது. ஜூலை 11ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும்.
வேட்புமனு நிலையங்களில் திரண்ட ஆதரவாளர்கள், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
காவல்துறையின் கண்காணிப்புடன் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டதாக வேட்புமனுத் தாக்கல் நிலையங்களைச் சுற்றி அமைதியும் ஒழுங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.
ஜோகூர் மாநிலத்தில் முன்கூட்டியே வாக்களிக்க ஜூலை 7ஆம் தேதியை ஆணையம் அறிவித்தது.
ஏறக்குறைய 2,727,926 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களில் 2,703,175 பேர் பொதுமக்கள்; 12,041 பேர் ராணுவத்தினர்; 12,710 பேர் காவல்துறையினர் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்துணையர்.
மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டி
எதிர்வரும் தேர்தலில் 56 இடங்களில் 172 வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கின்றனர்.
பாரிசான் நேஷனல், பக்கத்தான் ஹரப்பான் ஆகிய கட்சிகள் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதாகத் தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருண் கூறினார்.
பெரிக்கத்தான் நேஷனல் கட்சி 33 இடங்களில் போட்டியிடுகிறது.
பெர்சாமா மலேசியா கட்சி 15 இடங்களிலும் மலேசிய ஒற்றுமை ஜனநாயகக் கூட்டணி நான்கு இடங்களிலும் போட்டியிடுவதாக திரு ஹரும் சொன்னார்.
ஆக மூத்த வேட்பாளருக்கு வயது 73. ஆக இளைய வேட்பாளரின் வயது 23.
எந்த ஒருவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்படவில்லை என்று திரு ஹருண் குறிப்பிட்டார்.
14 தொகுதிகளில் நேரடிப் போட்டியும் 27 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும் நிலவுகிறது. அத்துடன், 12 தொகுதிகளில் நான்குமுனைப் போட்டியும் மூன்று தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டியும் நிலவுகிறது.

