தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை அதிபர் வேட்பாளர்களில் ஒருவர்கூட பெண் இல்லை

2 mins read
95e7dda2-ad73-4cda-bb14-74ff6c3971ee
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இன்னும் பத்து நாள்களில் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர்கூட இல்லை.

இலங்கையின் மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். அதேபோல, அந்நாட்டின் ஊழியரணியிலும் பெண்களின் விகிதம் ஆண்களைக் காட்டிலும் அதிகம்.

இவ்வாறிருக்கையில், அதிபர் தேர்தலில் களமிறங்கி உள்ள 38 வேட்பாளர்களில் ஒருவர்கூட பெண் இல்லை.

எந்த ஓர் அரசியல் கட்சியும் பெண் வேட்பாளரை நிறுத்தவில்லை.

பெண்கள் சுயேச்சையாகவும் போட்டியிட முன்வரவில்லை.

உலக நாடுகளில் பெண் ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்தி அழகுபார்த்த முதல் நாடு இலங்கை. 1960ஆம் ஆண்டு அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இலங்கைப் பிரதமராக அப்போது தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இங்கிலாந்து பிரதமராக மார்கரெட் தாட்சரும் இந்தியப் பிரதமராக இந்திரா காந்தியும் அதற்குப் பின்னர்தான் வந்தார்கள்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் மகள் சந்திரிகா குமாரதுங்கவும் இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் பதவிகளை வகித்தவர்.

செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் 17 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்று உள்ளனர். அவர்களில் 52 விழுக்காட்டினர் பெண்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களின் விகிதம் ஒருபோதும் 7 விழுக்காட்டைத் தாண்டியதில்லை.

தற்போது உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில்கூட 5.3 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள். அமைச்சரவையிலும் சொற்ப எண்ணிக்கையில்தான் பெண்களுக்கு இடம் தரப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகளில் 25 விழுக்காட்டினர் இடம்பெற வேண்டும் என்பது இலங்கையில் வெறும் வார்த்தையாக மட்டுமே உள்ளது என்றும் அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசூர்ய தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்