சோல்: ஜப்பானின் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற தினத்தை வடகொரியா கொண்டாடிய நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு அனுப்பிய செய்தியில், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ரஷ்யாவுடனான வலுவான உறவை மறு உறுதிப்படுத்தியதாக ‘கேசிஎன்ஏ’ அரசாங்கச் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 81ம் ஆண்டுநிறைவை முன்னிட்டு, அதிபர் புட்டின் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்குத் திரு கிம் பதிலளித்தார்.
சோவியத் வீரர்கள் ஜப்பானுக்கு எதிராகப் போரிட்டபோதே அந்தப் பிணைப்பு உருவானது என்றும் அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் ரஷ்ய அதிபர் கூறியிருந்தார்.
நீதிக்கான பொதுவான போராட்டம் மற்றும் விலைமதிப்பற்ற நட்புறவின் வரலாற்றை முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ள அந்த உறவின் எதிர்காலம் மீது நம்பிக்கை இருப்பதாகத் திரு புட்டின் தெரிவித்தார்.
ரஷ்யா, உக்ரேனுக்கு எதிராக நடத்திவரும் போருக்கு ஆதரவாக வடகொரியா அதன் படையினரையும் ஆயுதங்களையும் அனுப்பத் தொடங்கியதிலிருந்து, பியோங்யாங், மாஸ்கோ இடையேயான உறவு மேலும் நெருக்கமடைந்துள்ளது. 1950களுக்குப் பிறகு வடகொரியா பெரிய அளவில் ஈடுபட்டுள்ள போராக அது கருதப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு ராணுவ ஆதரவை வழங்கியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான உறவு குறித்துத் தாம் பெருமைப்படுவதாகத் திரு கிம் திரு புட்டினிடம் கூறியுள்ளார்.
2022ல் உக்ரேன்மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, வடகொரியா கிரெம்ளினின் மிக முக்கிய நட்பு நாடாக மாறியுள்ளது.
பொருளாதார நன்மைகளையும் ராணுவத் தொழில்நுட்பத்தையும் பெறுவதற்காக, மாஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு ஆதரவாக வடகொரியா அதன் படைகளை அனுப்பி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


