கொவிட்-19 காலத்தில் அதிக அளவில் மரண தண்டனைகளை நிறைவேற்றிய வடகொரியா

கொவிட்-19 காலத்தில் அதிக அளவில் மரண தண்டனைகளை நிறைவேற்றிய வடகொரியா

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

28 Apr 2026 - 7:21 pm

2 mins read

சோல்: கொவிட்-19 பரவல் காலத்தின்போது தனது எல்லைகளை மூடிய பிறகு, வடகொரியா கணிசமான அளவில் அதிக மரண தண்டனைகளை நிறைவேற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பெரும்பாலான தண்டனைகள் வெளிநாட்டுக் கலாசாரம், சமயம் ஆகியவற்றுக்கு அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறியதற்கானவை என்று தென்கொரியத் தலைநகர் சோலில் இயங்கும் சமூகக் குழு (civic group) திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தெரிவித்தது.

2020லிருந்து 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 60 வழக்குகளில் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக நீதி உருமாற்றுச் செயற்குழு (Transitional Justice Working Group) அறிக்கையில் தெரிவித்தது. அதற்கு முந்தைய ஐந்தாண்டுக் காலத்தில் வடகொரியாவில் 41 பேருக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

வடகொரியாவிலிருந்து தப்பியோடி தென்கொரியாவில் வாழும் 880 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் மூலம் இத்தகவல்கள் தெரியவந்தன. செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இடங்களை அக்குழு அடையாளம் கண்டது.

எனினும், இந்த அறிக்கையில் இடம்பெறும் தகவல்கள் சரியானவைதான் என்று உறுதியாகக் கூறமுடியாது என்றும் அது குறிப்பிட்டது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில், வெளிநாட்டுக் கலாசாரம், சமயம் ஆகியவற்றின் தொடர்பிலான விதிமீறலில் ஈடுபட்டோர்தான் ஆக அதிகமாக இருந்தனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கே-டிராமா என்றழைக்கப்படும் தென்கொரிய நாடகங்கள், தென்கொரியத் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்ப்பது அத்தகைய விதிமீறல்களில் அடங்கும்.

கொள்ளைநோய்ப் பரவல் காரணமாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு பெரும்பாலும் கொலைக் குற்றங்களுக்குத்தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், அரசியல் குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 2020 வரையிலான ஐந்தாண்டுக் காலத்தில் நான்காக இருந்த அந்த எண்ணிக்கை 2020லிருந்து 2024க்கு இடைப்பட்ட காலத்தில் 28ஆக கூடியது.

குறிப்புச் சொற்கள்