நேட்டோ உச்சநிலை மாநாட்டுக்கு வடகொரியா கண்டனம்

நேட்டோ உச்சநிலை மாநாட்டுக்கு வடகொரியா கண்டனம்

1 mins read
325a1902-172e-4788-a6b4-b0dbf14aac5a
பியோங்யாங்கில் சென்ற மாதம் நடைபெற்ற கொரியத் தொழிலாளர் கட்சியின் ஒன்பதாவது மத்திய குழுக் கூட்டத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உரையாற்றினார். - படம்: ராய்ட்டர்ஸ்

பியோங்யாங்: வடகொரியா, நேட்டோ உச்சநிலை மாநாட்டைக் கண்டித்துள்ளது.

மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாக அது குற்றஞ்சாட்டியது. அத்துடன் ஆயுதக் குவிப்பை அவை விரைவுபடுத்தியுள்ளதாகவும் வடகொரியா சனிக்கிழமை (ஜூலை 11) கூறியது.

வடகொரியா, அதன் நியாயமான இறையாண்மை உரிமைகளைப் பயன்படுத்துவதை நேட்டோ தலைவர்கள் ஓர் அச்சுறுத்தலாய்ச் சித்திரிப்பதாகப் பியோங்யாங் குற்றஞ்சாட்டியது. வடகொரிய வெளியுறவு அமைச்சின் அறிக்கை, அந்நாட்டு அரசாங்க ஊடகமான ‘கேசிஎன்ஏ’வில் வெளியிடப்பட்டது.

நேட்டோ கூட்டணியின் தற்காப்புச் சுமையில் பெரும்பங்கை ஐரோப்பிய நாடுகள் ஏற்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இம்மாதம் 7ஆம் தேதி துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சநிலை மாநாட்டில் , 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் ($65 பில்லியன்) அதிகமான ராணுவக் கொள்முதல், தொழில்துறை ஒப்பந்தங்களை அதிகாரிகள் அறிவித்தனர்.

மாநாட்டிற்கு இடையே பேசிய தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், நேட்டோ கூட்டணியுடன் தமது நாடு ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்புவதாகக் கூறினார். அதிநவீனத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளிலும் ஆயுதக் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தென்கொரியா சேர்ந்து பணியாற்ற ஆர்வத்துடன் இருப்பதாக அவர் சொன்னார்.

ஐரோப்பாவிலும் ஆசிய-பசிபிக் வட்டாரத்திலும் அமைதியையும் பாதுகாப்பையும் புறக்கணித்து, அரசியல் நலன்களை நேட்டோ பின்தொடர்வதாக வடகொரியா குறைகூறியது. நேட்டோ, போரையும் மோதலையும் நோக்கமாகக் கொண்ட ஓர் அமைப்பு என்பதை அண்மை உச்சநிலை மாநாடு காட்டியிருப்பதாக வட கொரியா சொன்னது.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாகிம் ஜோங் உன்தென்கொரியாஅமெரிக்காநேட்டோகண்டனம்அணுவாயுதம்