தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கப் போர் விமானப் பயிற்சியைத் தொடர்ந்து ஏவுகணை பாய்ச்சிய வடகொரியா

2 mins read
aac755a6-c298-4524-96a1-a20fa5f109ac
அமெரிக்காவும் தென்கொரியாவும் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் போர் விமானங்களை ஈடுபடுத்தி கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: வடகொரியா, புதன்கிழமை, இரண்டு குறுந்தொலைவு ஏவுகணைகளைக் கடலுக்குள் பாய்ச்சியதாகத் தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.

நட்பு நாடுகளுடனான கூட்டுப் பயிற்சிக்காக அமெரிக்கா, குண்டு வீசும் ‘பி-1பி’ ரகப் போர் விமானங்கள் இரண்டை அனுப்பிய சில மணி நேரத்தில் பியோங்யாங் அந்த ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

குறைந்தது ஓர் ஏவுகணையாவது பாய்ச்சப்பட்டதாக ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு உறுதிசெய்துள்ளது. ஆனால் இரண்டு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகவும் அவை ஜப்பானின் பொருளியல் வட்டாரத்துக்கு அப்பால் சென்று விழுந்ததாகவும் ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தங்கள் ராணுவம் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளதாகத் தென்கொரிய கூட்டு ராணுவப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார். இத்தகைய சினமூட்டும் நடவடிக்கைகள் மேலும் தொடர்ந்தால் அதற்குத் தயார்நிலையில் இருக்கும் பொருட்டு, கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தயார்நிலையைத் தக்கவைப்பதற்காக அமெரிக்காவுடனும் தென்கொரியாவுடனும் அணுக்கமாக ஒத்துழைப்பதாக அவர் சொன்னார்.

அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான 11 நாள் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைய ஒரு நாள் முன்னதாக வடகொரியா ஏவுகணைகளைப் பாய்ச்சியது குறிப்பிடத்தக்கது. அந்தக் கூட்டுப் பயிற்சிக்கு ஏற்கெனவே பியோங்யாங் கண்டனம் தெரிவித்திருந்தது.

புதன்கிழமை, தென்கொரிய, ஜப்பானியப் போர் விமானங்களுடன் இணைந்து அமெரிக்காவின் குண்டு வீசும் ‘பி-1பி’ ரகப் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத் தீர்மானங்களின்படி வடகொரியாவின் நெடுந்தொலைவு ஏவுகணைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான ஆயுத விற்பனைப் பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்படுவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. ஆயுத ஒப்பந்தம் எதுவும் எட்டப்படுமாயின் அது தடைகளை மீறியதாகக் கருதப்படும் என்பதை வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்புப் பேச்சாளர் ஜான் கிர்பி சுட்டினார்.

ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் அண்மையில் வடகொரியா சென்றதையும் ஆயுத விற்பனை தொடர்பில் பியோங்யாங்கைச் சமாதானப்படுத்த அவர் முயன்றதையும் திரு கிர்பி சுட்டினார்.

அமெரிக்காவும் தென்கொரியாவும் தற்போது வடகொரியா பாய்ச்சும் ஏவுகணைகளைக் கண்காணிப்பதில் அணுக்கமாக ஒத்துழைத்து வருகின்றன. விரைவில் ஜப்பானும் அதில் இணைந்துகொள்ளும் எனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்