சோல்: வடகொரியா தனது கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அருகே ஏவுகணை ஒன்றைப் பாய்ச்சியுள்ளது.
அந்நாடு கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்னர்தான் ஏவுகணையைப் பாய்ச்சியதாக தென்கொரியக் கூட்டுப் படைத் தலைவர் கூறினார். வடகொரியா இவ்வாண்டு பாய்ச்சியுள்ள 12ஆவது ஏவுகணை இது.
அமெரிக்க வேவு விமானங்கள் தனது வான்வெளிக்குள் அத்துமீறி நுழைவதாக அண்மைய நாள்களாக வடகொரியா குறைகூறிவந்த நிலையில், அந்த ஏவுகணை பாய்ச்சப்பட்டுள்ளது. அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அண்மையில் தென்கொரியாவுக்குச் சென்றதையும் அது கடுமையாகச் சாடியது.
இதற்கிடையே, ஜப்பானியக் கடலோரக் காவல்படை காலையில் ஏவுகணை ஒன்று தனது கடற்பகுதியில் விழுந்திருப்பதாகக் கூறியது. ஏவுகணை ஜப்பானின் பொருளியல் வட்டாரத்திற்கு வெளியே, கொரியத் தீபகற்பத்திற்கு 550 கிலோமீட்டர் கிழக்கில் விழும் என்று இதற்கு முன்னர் அது முன்னுரைத்திருந்தது.
சம்பவம் குறித்து கூடுதல் தகவல்களைத் திரட்டி, எதிர்பாரா நிகழ்வுகளுக்கு ஆயத்தமாக விழிப்புடன் இருக்குமாறு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர் நேட்டோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தற்போது லித்துவேனியாவில் இருக்கிறார்.