சோல்: வடகொரியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக சனிக்கிழமை (செப்டம்பர் 9) ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.
தலைநகர் பியோங்யாங்கில் அமைந்திருக்கும் கிம் இல் சுங் சதுக்கத்தில் நடைபெற்ற அணிவகுப்பை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டார்.
சீனாவிலிருந்து வடகொரியா சென்ற அரசதந்திரப் பேராளர் குழுவிடம் அவர் பேச்சு நடத்தியதாக, வடகொரியாவின் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்தது.
அரசதந்திர ரீதியான பரிமாற்றங்களின்போது, சீனாவுடனும் ரஷ்யாவுடனும் உறவுகளை வலுப்படுத்த திரு கிம் சூளுரைத்தார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங் அனுப்பிய கடிதத்தில், வடகொரியாவுடனான உத்திபூர்வமான தொடர்பு, பணிநிலை ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் திரு கிம்முக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். கொரியத் தீபகற்பத்திலும் வடகிழக்கு ஆசியாவிலும் பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்ய ரஷ்யாவும் வடகொரியாவும் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்தும் என்று அக்கடிதத்தில் அதிபர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
திரு கிம் இந்த மாதத்தில் ரஷ்யா சென்று அதிபர் புட்டினைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரேன்மீது முழுவீச்சிலான படையெடுப்பை ஆதரிக்கும் விதமாக, பியோங்யாங் மாஸ்கோவிற்கு ஆயுதங்களை அனுப்புவது தொடர்பில் இருவரும் பேச்சு நடத்துவர்.