பியோங்யாங்: பல ஆண்டுகளாக அரசதந்திர ரீதியில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட வடகொரியா 2026ல் அரசதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கும் என்று கருதப்படுகிறது.
2026 தொடக்கத்தில் வடகொரிய ஆளுங்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை மீண்டும் சந்தித்துப் பேசுவது உள்ளிட்ட அரசதந்திர நடவடிக்கைகள் இடம்பெறக்கூடும்.
வடகொரிய ஆளுங்கட்சிக் கூட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தொழிலாளர் கட்சியின் வலிமையான அம்சங்களில் ஒன்றாக அந்தக் கூட்டம் கருதப்படுகிறது. 2026ல் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நாட்டின் தற்காப்புத் திறன்களை மேம்படுத்தும் கொள்கையைப் பின்பற்றவும் முக்கியமான அரசதந்திர உத்தி குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று வடகொரிய ஆய்வாளர்கள் சிலர் கணித்துள்ளனர்.
திரு கிம் முதன்முறையாக, கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டதிலிருந்து வடகொரியாவின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடு தொடர்பான ஊகங்கள் பரவலாக எழுகின்றன.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியப் படைகள் சரணடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் விதமாக நடைபெற்ற அந்த அணிவகுப்பில் திரு கிம்முடன் சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அதையடுத்து அக்டோபரில் வடகொரிய ஆளுங்கட்சியின் 80ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பியோங்யாங்கில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அதில் சீனப் பிரதமர் லீ சியாங், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமித்ரி மெட்வெடேவ், வியட்னாமியத் தலைவர் டோ லாம் உள்ளிட்ட வெளிநாட்டுப் பேராளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஆளுங்கட்சிக் கூட்டத்தில் உத்திபூர்வ முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகு, டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும் சாத்தியம் உள்ளது என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.
கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டது முதல் திரு டிரம்ப், வடகொரியத் தலைவருடன் மீண்டும் பேச்சு நடத்த ஆர்வம் காட்டுகிறார். அவரது முந்தைய தவணைக்காலத்தில் இரு தலைவர்களும் மூன்று முறை சந்தித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வடகொரிய ஆளுங்கட்சிக் கூட்டத்திற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

