சோல்: வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் மாண்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பியோங்யாங்கில் அமைக்கப்பட்ட புதிய வீடமைப்பு வட்டாரம் கட்டிமுடிக்கப்பட்டதைக் குறிக்கும் நிகழ்ச்சிக்கு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தலைமைதாங்கினார்.
அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ அந்தத் தகவலை பிப்ரவரி 16ம் தேதி வெளியிட்டது.
மாண்ட ராணுவ வீரர்களின் உணர்வையும் தியாகத்தையும் புதிய வட்டாரம் பிரதிபலிப்பதாக திரு கிம் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் மகன்களையும் கணவர்களையும் எண்ணி பெருமைகொள்ளவும் மகிழ்ச்சியாக வாழவும் அந்த வீடுகள் வழிவகுக்கும் என்றும் அவர் சொன்னார்.
வீட்டுத் திட்டத்தை ஒரு நாளுக்கு முன்னரே முடிக்கத் தாம் கேட்டுக்கொண்டதாகவும் திரு கிம் கூறினார். ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அது சிறிதளவு ஆறுதலாக அமையக்கூடும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்ததாக அவர் சொன்னார்.
கடந்த 2024ம் ஆண்டில், ரஷ்யாவுடனான பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தத்தின்கீழ், ரஷ்யப் படைகளுடன் ஒன்றுசேர்ந்து சண்டையிட வடகொரியா ஏறக்குறைய 14,000 ராணுவ வீரர்களை உக்ரேனுக்கு அனுப்பியது. அவர்களில் 6,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தென்கொரிய, உக்ரேனிய, மேற்கத்திய தகவல்கள் தெரிவித்தன.
போரில் மாண்டவர்களைக் கௌரவிக்க அண்மைய மாதங்களில் வடகொரியா பல்வேறு பொது நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. பியோங்யாங்கில் திறந்துவைக்கப்பட்ட புதிய நினைவக வளாகம் ஒன்றும் அவற்றில் அடங்கும். அந்த வளாகத்தில் ராணுவ வீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கவிருக்கும் ஆளும் பாட்டாளிக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ் கூட்டத்தை முன்னிட்டு, புதிய வீடமைப்பு வட்டாரம் திறக்கப்பட்டுள்ளது.

