சோல்: வடகொரியா தனது அணுவாயுதங்கள் பேரம் பேசுவதற்காக அல்ல என்று கூறியுள்ளது.
மாறாக, அவை தன்னாட்டு மக்களுக்கும் உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் எதிரிகளை எதிர்த்துப் போர் புரிவதற்கு ஆனது என்று வடகொரிய அரசு ஊடகம் கூறியுள்ளது.
பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி ஜப்பானியப் பிரதமர் ஷிகேரு இஷிபா அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தபோது இருநாட்டுத் தலைவர்களும் வடகொரியா தனது அணுவாயுதத் திட்டத்தை கைவிட வைப்பதற்கு தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினர். இந்நிலையில், வடகொரியாவின் தற்போதைய அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க, ஜப்பானியத் தலைவர்களின் சந்திப்பு குறித்து வடகொரிய ஊடகம் எதுவும் கூறவில்லை. மாறாக, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வடகொரியா தனது அணுவாயுதத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததைச் சுட்டி அது தற்போது இவ்வாறு கூறியுள்ளது.
“நாங்கள் இதை மீண்டும் தெளிவாகக் கூறுகிறோம். எங்கள் அணுவாயுதங்கள் விளம்பரத்திற்காகவோ, மற்ற நாடுகளிடமிருந்து பணம் பெறுவதற்காக பேரம் பேசுவதற்காகவோ அல்ல,” என்று கேசிஎன்ஏ எனப்படும் அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.