சோல்: ஆண்டுதோறும் 20 ஆயுதங்கள் வரை தயாரிக்கப் போதுமான அணுசக்தியை வடகொரியா தயாரிப்பதாகத் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் இலக்குகள் உலகளவில் அபாயம் விளைவிக்கக்கூடும் என்று அவர் புதன்கிழமை (ஜனவரி 21) எச்சரித்தார்.
வடகொரியா, ஐக்கிய நாட்டு நிறுவனத் (ஐநா) தீர்மானங்களையும் மீறி முதன்முறையாக 2006ஆம் ஆண்டு அணுவாயுதச் சோதனையை நடத்தியது. இப்போது அதனிடம் பல அணுவாயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
“இப்போதுகூட ஆண்டுக்கு 10 முதல் 20 அணுவாயுதங்களுக்குத் தேவையான அணுசக்திப் பொருள்கள் வடகொரியாவில் தயாரிக்கப்படுகின்றன,” என்று திரு லீ புத்தாண்டையொட்டி நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்காவைத் தாக்கும் நோக்குடன் வடகொரியா, தனது தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை மேம்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டினார். ஒரு கட்டத்தில் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகிற்கே மிரட்டல் விடுக்கக்கூடிய அணுவாயுத ஆற்றலை வடகொரியா பெற்றுவிடக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
“தேவைக்கு அதிகமான அணுவாயுதங்கள் கைவசம் இருக்கும்போது அது எல்லை தாண்டிச் செயல்படும். அப்போது உலகளவில் அபாயம் எழும்,” என்று திரு லீ எடுத்துரைத்தார்.
தங்கள் நாட்டில் ஆட்சியை மாற்ற வாஷிங்டனும் அதன் பங்காளிகளும் முயற்சி எடுத்து வருவதாகவும் அதனைத் தவிர்க்க தாங்கள் அணுசக்தித் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் பியோங்யாங் பற்பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது.

