சோல்: மிகப் பெரிய ராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியதாக அந்நாட்டின் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் சனிக்கிழமை (அக்டோபர் 11) செய்தி வெளியிட்டது.
அணிவகுப்பை வடகொரியத் தலைவர் நேரில் பார்வையிட்டார்.
அணிவகுப்பின் சிறப்பு அம்சமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணை காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த அணிவகுப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்றது.
வடகொரியாவை ஆளும் கட்சி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதைக் கொண்டாடும் வகையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
சீனப் பிரதமர் லீ கியாங், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டுமிட்ரி மெட்வெடேவ் தலைமையிலான ரஷ்யப் பேராளர்க் குழு, வியட்னாமின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டோ லாம் முதலியோர் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற அணிவகுப்பை நேரில் கண்டு களித்தனர்.
அணுவாயுத ஆற்றல் கொண்ட நாடுகளில் ஒன்றான வடகொரியா அதன் அதிநவீன ஹுவாசோங்-20 ஏவுகணையை உலகிற்குக் காட்டியது.
தொடர்புடைய செய்திகள்
அதுவே வடகொரியாவின் ஆகச் சக்திவாய்ந்த அணுவாயுதம் என்று அந்நாட்டின் ஊடகம் தெரிவித்தது.
ஹுவாசோங் வகை ஏவுகணைகளால் அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு பகுதியையும் அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏவுகணையை வழிநடத்தும் முறையின் தரம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அணுவாயுதத்தை ஏந்திக்கொண்டு அந்த வகை ஏவுகணைகளால் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைய முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் திரு கிம் உரையாற்றினார்.
வெளிநாடுகளில் வடகொரிய ராணுவ வீரர்களின் செயல்பாட்டை அவர் பாராட்டினார். வடகொரியாவைத் தற்காக்கவும் சமத்துவக் கொள்கை கொண்ட நாடுகளின் எல்லைகளைத் தற்காக்கவும் வடகொரிய ராணுவம் மிகுந்த துணிச்சலுடன் செயல்படும் என்று திரு கிம் கூறினார்.