பியோங்யாங்: அமெரிக்காவின் தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு நிலையமாகச் செயல்பட்டால் தென்கொரியா குறிவைக்கப்படும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.
வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏவில் வெளியான கட்டுரையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா அதன் உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநாட்டத் தென்கொரியாவை ஒரு தளமாய்ப் பயன்படுத்துவதாக வடகொரிய ஆய்வு நிறுவனமொன்றின் துறை இயக்குநர் காங் சோல் சு அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வெளிநாட்டு மோதல்களில் முதன்முதலில் களமிறக்குவதற்கான நிலையமாகவும் தென்கொரியாவை அமெரிக்கா பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கொரியாவில் இயங்கும் அமெரிக்கப் படைகளின் தளபதி, கூட்டுப் பாதுகாப்பின் முக்கிய நிலையமாகத் தென் கொரியாவைச் சித்திரிப்பதாகத் திரு காங் சுட்டினார். இரு நாடுகளும் கூட்டுப் பயிற்சிகளை நடத்துவதையும் அமெரிக்கப் படையினர் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையும் அவர் குறைகூறினார்.
வடகொரியா தகுந்த பதில் நடவடிக்கைகளைத் தயார்நிலையில் வைத்துள்ளது என்றும் அதன் பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் சவால்கள் தயக்கமின்றி நசுக்கப்படும் என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
கொரியாவில் இயங்கும் அமெரிக்கப் படைகள் இதுகுறித்து உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
வடகொரியா ஒருவேளை ஆக்கிரமிக்க நினைத்தால் அத்தகைய நடவடிக்கையைத் தடுப்பதற்கு உதவும் நோக்கத்துடன் அமெரிக்கா கிட்டத்தட்ட 28,500 ராணுவ வீரர்களைத் தென் கொரியாவில் பணியமர்த்தியுள்ளது.
