தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிரிகள் வேருடன் அழிக்கப்படுவர்; வடகொரியா சூளுரை

1 mins read
af279a54-722f-4b53-9b0e-3f5b37cd0236
‘வெற்றி தினத்தில்’ கலந்துகொண்ட வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன். - படம்: ராய்ட்டர்ஸ்

பியோங்யாங்: ஒருவேளை போர் வெடித்தால் எதிரிப் படைகள் வேருடன் அழிக்கப்படும் என்று வடகொரியா சூளுரைத்துள்ளது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிடும்போது எதிரிகள் முழுமையாக அழிக்கப்படுவர் என்று அந்நாட்டின் ராணுவத் தலைவரும் கடற்படைத் தலைவரும் தெரிவித்ததாக வடகொரிய ஊடகம் ஜூலை 28ஆம் தேதியன்று தெரிவித்தது.

அவர்கள் இருவரும் அமெரிக்காவையும் தென்கொரியாவையும் மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு கூறியதாக அறியப்படுகிறது.

கொரியப் போர் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இவ்வாண்டு ஜூலை 27ஆம் தேதியுடன் 71 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் திரு கிம் கலந்துகொண்டார்.

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அரசதந்திர உறவுகள் இல்லை.

மேலும், கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றநிலை, அணுவாயுதத் தாக்குதலைத் தவிர்ப்பது ஆகியவை குறித்த பேச்சுவார்த்தை 2019ஆம் ஆண்டிலிருந்து முடங்கிக் கிடக்கிறது.

அமெரிக்காவின் அடுத்த அதிபராக யார் பதவி ஏற்றாலும் இந்நிலை மாறப்போவதில்லை என்று வடகொரிய ஊடகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதப் போர் வெடிக்க அமெரிக்காவும் தென்கொரியாவும் தூண்டுவதாக வடகொரிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது.

வடகொரியத் தலைவர் கிம் உத்தரவிட்டால் எந்நேரமும் எதிரிப் படைகளுக்கு எதிராகப் போர் தொடுக்க தயாராகும் வகையில் வடகொரியப் படைகளின் ஆற்றலை மேம்படுத்தப்போவதாக அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் சூளுரைத்துள்ளனர்.

ஜூலை 27ஆம் தேதியை ‘வெற்றி தினம்’ என வடகொரியா அழைக்கிறது. அந்த நாளைத் தென்கொரியா ஒன்றும் பெரிதாக அனுசரிப்பதில்லை.

குறிப்புச் சொற்கள்