சோல்: வடகொரியா மிகப் பெரிய சுற்றுலா வட்டாரக் கட்டுமானத்தை நிறைவுசெய்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வியாழக்கிழமை (ஜூன் 26) தகவல் வெளியிட்டுள்ளது.
சுற்றுப்பயணத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் வழிநடத்திய முக்கியத் திட்டம் அது.
வோன்சான் கல்மா கடற்கரைச் சுற்றுலா வட்டாரத்தின் அதிகாரபூர்வ தொடக்கவிழா நிகழ்ச்சியில் திரு கிம் கலந்துகொண்டதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
புதிய சுற்றுலா வட்டாரம் ஒரேநேரத்தில் கிட்டத்தட்ட 20,000 வருகையாளர்களைக் கையாளக்கூடியது என்றும் இத்தகைய பேரளவிலான சுற்றுலா வட்டாரங்களை வடகொரியா விரைவில் கட்டமைக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
கடலோர நகரமான வோன்சான் வடகொரியர்களின் புகழ்பெற்ற உள்ளூர் விடுமுறைத் தலமாக விளங்குகிறது. அதை பில்லியன் டாலர் மதிப்பிலான சுற்றுப்பயணத் தலமாகக் கட்டமைத்து வருகிறார் திரு கிம்.
அதற்கான மேம்பாட்டுத் திட்டம் 2014ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
வடகொரியாவின் ஆயுதத் திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) அதன் மீது தடைகளை விதித்துள்ளது.
ஐநா தடையால் பாதிக்கப்படாத வடகொரியச் சுற்றுப்பயணத் துறை, நாட்டின் வருவாய்க்கு உதவக்கூடும் என்றபோதும் வோன்சான் திட்டத்தில் வெளிநாட்டுப் பங்காளிகளை அது இணைத்துக்கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
வோன்சான் சுற்றுலா வட்டாரம் உள்நாட்டு வருகையாளர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி திறக்கப்படும் என்று கேசிஎன்ஏ தகவல் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு அது எப்போது திறக்கப்படும் என்பது குறித்துத் தகவல் இல்லை.
கொவிட்-19 பெருந்தொற்றை முன்னிட்டு 2020ஆம் ஆண்டு வடகொரியா அதன் எல்லைகளை மூடியது. 2023ஆம் ஆண்டு முதல் கட்டுப்பாடுகளை அது மெல்லத் தளர்த்திவருகிறது.
ரஷ்யச் சுற்றுப்பயணிகள் வடகொரியாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதும் தலைநகர் பியோங்யாங்கும் நாட்டின் இதர பகுதிகளும் பொதுவான சுற்றுப்பயணிகளுக்கு இன்னும் திறக்கப்படவில்லை.

