பியோங்யாங்: வடகொரியாவைச் சேர்ந்த இணைய ஊடுருவிகள் இதற்குமுன் இல்லாத அளவில் இவ்வாண்டில் மின்னிலக்க நாணயத் தளங்கள் வழியாகப் பெரும்பணத்தைத் திருடியுள்ளதாக ‘செய்னாலிசிஸ்’ (Chainalysis) பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னிலக்கத் தளங்கள் வழியாக இவ்வாண்டில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3 பில்லியன்) பணம் பறிபோயுள்ளது என்றும் அதில் பாதிக்கும் மேலான களவிற்கு வடகொரிய மின்னிலக்கத் திருடர்களே காரணம் என்றும் செய்னாலிசிஸ் வியாழக்கிழமை (டிசம்பர் 19) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அதாவது, இவ்வாண்டில் 47 இணையத் திருட்டுகள் மூலம் $1.8 பில்லியன் பணத்தை வடகொரியா ஆதரவு பெற்ற குழுக்கள் களவாடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது, முந்திய 2023ஆம் ஆண்டைப்போல் இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பப் பணியாளர்களாகத் தொலைவிலிருந்து பணியாற்றியபோது மோசடியிலும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றத்திலும் ஈடுபட்டதாகக் கூறி, 14 வடகொரியர்கள்மீது அமெரிக்க நீதித்துறை இம்மாதம் 12ஆம் தேதி குற்றஞ்சாட்டியது.
சொத்து சார்ந்த தகவல் திருட்டு மூலமும் மிரட்டிப் பணம் பறித்ததன் மூலமும் அவர்கள் 88 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணத்தைச் சுருட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.