தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் புட்டினுடன் பேச்சு நடத்த ரஷ்யா செல்லும் வடகொரியத் தலைவர்

1 mins read
045857b4-1033-4948-b349-7de023b8bffe
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சென்ற ஞாயிற்றுக்கிழமை பியோங்யாங்கிலிருந்து ரயிலில் ரஷ்யா புறப்பட்டுச் சென்றதாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சென்ற ஞாயிற்றுக்கிழமை, குண்டு துளைக்காத ரயிலில் ரஷ்யா புறப்பட்டுச் சென்றதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை அவர் சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை இந்தத் தகவலை வெளியிட்ட கேசிஎன்ஏ, ரயில் ரஷ்ய எல்லையைக் கடந்துவிட்டதா என்று கூறவில்லை.

ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினும் திரு கிம் ரஷ்யாவிற்கு விரைவில் வருகை தரவிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரேன்மீதான போரில் பயன்படுத்துவதற்காக, வடகொரியாவிடமிருந்து திரு புட்டின் ஆயுதங்களைக் கோரியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், செயற்கைக்கோளுக்கான மேம்பட்ட தொழில்நுட்பம், அணுவாயுத ஆற்றல்கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள், உணவு உதவி ஆகியவற்றை திரு கிம் கோருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்தச் சந்திப்பு உக்ரேனியப் படையெடுப்பு தொடர்பில் திரு புட்டின் உதவி கேட்டுக் கெஞ்சுவதைக் காட்டுவதாக அமெரிக்கா கருத்துரைத்துள்ளது.

வடகொரியத் தலைவர் கிம் மிக அரிதாகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது வழக்கம். கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு அவர் நாட்டை விட்டு வெளியே செல்வது இதுவே முதல்முறை.

ரஷ்யாவின் விளாடிவொஸ்டோக் நகரை நோக்கி அவரது ரயில் செல்வதாகத் தெரிகிறது. அங்கு புதன்கிழமை வரை நடைபெறும் கிழக்குப் பொருளியல் கருத்தரங்கில் திரு புட்டின் கலந்துகொள்கிறார்.

குறிப்புச் சொற்கள்