ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் வடகொரியப் படைபலம் 50,000ஆக அதிகரிக்கக்கூடும்

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் வடகொரியப் படைபலம் 50,000ஆக அதிகரிக்கக்கூடும்

படம்: இபிஏ

13 Aug 2026 - 5:24 pm

1 mins read

கியவ்: உக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு ரஷ்யப் பகுதிகளுக்குக் கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புவது குறித்து வடகொரியா பரிசீலனை செய்து வருவதாக உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அது புதன்கிழமை (ஆகஸ்ட் 12) வெளியிட்டது.

உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோன்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யாவுக்கு உதவும் வகையில் ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் தனது படைபலத்தை 50,000ஆக உயர்த்த வடகொரியா திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் உயிரிழந்த அல்லது காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 42,000க்கும் அதிகமாகப் பதிவானது. போரைத் தொடர வடகொரியாவிடம் ரஷ்யா கூடுதல் படைகளைக் கோரி வருகிறது.

2024ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான உத்திபூர்வப் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் அடிப்படையில், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட வடகொரிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு, உக்ரேனியப் படைகளுடன் போரிட்டு வருகின்றனர்.

தற்போது வடகொரியாவின் தரைப்படை வீரர்கள் 9,500 பேரும், ஏவுகணைப் படைவீரர்கள் 90 பேரும் ரஷ்யாவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், உக்ரேன் மீதான தாக்குதல்களுக்காக வடகொரியா ரஷ்யாவுக்குக் கூடுதலாக 40 ஏவுகணைகளையும் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வடகொரியாரஷ்யாஉக்ரேன்