ஆளில்லா வானூர்திகளைத் தடுக்க வடகொரியா புதிய முயற்சி

ஆளில்லா வானூர்திகளைத் தடுக்க வடகொரியா புதிய முயற்சி

2 mins read
16126d32-7a46-46a5-a5aa-083a478abd03
வடகொரியாவின் ஆக அண்மை கவச வாகனத்தில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன்னும் அவரின் மகள் ஜு ஏயும் பயணம் செய்துபார்த்தனர். - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியா ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் தடுத்துநிறுத்தக்கூடிய ஆற்றல்பெற்ற அதன் புதிய கவச வாகனங்களை உலகின் பார்வைக்குக் காட்டியிருக்கிறது.

போருக்கான ஆயத்த நடவடிக்கைகளை முடுக்கிவிடும்படி ராணுவத்திற்கு அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கவச வாகனங்கள் தாக்குதல் நடத்தி, எதிரியின் தற்காப்பு எல்லைக்குள் புகுந்து தாக்குவது போன்ற பாவனைப் பயிற்சிகளில் ஈடுபட்டன. அதனைத் திரு கிம் மேற்பார்வையிட்டதாக அதிகாரத்துவக் கொரிய மத்திய செய்தி நிறுவனமான ‘கேசிஎன்ஏ’ வெள்ளிக்கிழமை (மார்ச் 20) தெரிவித்தது.

“கவச வாகனம், பல்வேறு நிலைகளிலிருந்தும் திசைகளிலிருந்தும் அதை நோக்கிவந்த ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் 100 விழுக்காடு தடுத்துநிறுத்தியது,” என்று அது கூறியது.

கவச வாகனங்களின் பாதுகாப்புக் கட்டமைப்புத் திறனை அது வெளிப்படுத்துகிறது என்று கேசிஎன்ஏ குறிப்பிட்டது.

வடகொரியாவின் ஆக அண்மை கவச வாகனத்தில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன்னும் அவரின் மகள் ஜு ஏயும் பயணம் செய்துபார்த்தனர். அவர்கள் டாங்கியில் சென்ற படங்களை அரசாங்க ஊடகம் வெளியிட்டது. இருவரும் ஒரே மாதிரியான மேலங்கிகளை அணிந்திருந்தனர்.

ராணுவ நிகழ்ச்சியில் திரு கிம்மின் மகள் கலந்துகொள்வது இது முதன்முறையன்று. ஏற்கெனவே தந்தையோடு அவர் பயிற்சியின்போது துப்பாக்கியால் சுட்டதைக் காட்டிய படங்கள் வெளியிடப்பட்டன.

வடகொரியாவின் அடுத்த தலைவராகப் பெயர் குறிப்பிடக்கூடிய நிலைக்குத் திரு கிம்மின் மகள் ஜு ஏ முன்னேறியிருப்பதாகத் தென்கொரியாவின் வேவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

வடகொரியா அதன் ராணுவத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளை அண்மை ஆண்டுகளில் முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்