தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியாவின் புதிய ஆயுதம்: தாங்க முடியாத இரைச்சல்

2 mins read
7fa5832e-514f-44c9-ac4d-b95d6ab65ab2
வடகொரியாவுக்கு எதிரான தகவல்களைப் பரப்ப சோலில் கடந்த ஜூன் 3ஆம் தேதி சோதிக்கப்பட்ட, வான்குடைகளில் பொருத்தப்பட்ட ஒலிபரப்புக் கருவி. - படம்: ராய்ட்டர்ஸ்

டங்சான்-ரி, தென்கொரியா: தென்கொரியாவுக்கு எதிராக அண்மையில் புதுவகை ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது வடகொரியா.

பேரிரைச்சலான ஓசையை அது ஒலிபரப்புகிறது.

அதன் உளவியல் ரீதியிலான தாக்குதலால் இரு கொரியாக்களுக்கும் இடையில் உள்ள பகுதியில் வசிக்கும் தென்கொரியர்களுக்குத் தாங்க முடியாத தொல்லை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது டங்சான் கிராமம். வடகொரியாவிலிருந்து 1.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலோர் 60 வயது மதிக்கத்தக்கவர்கள்.

பேரளவிலான மணியை அடிப்பது போன்றும் ஓநாய்கள் ஊளையிடுவது போன்றும் திகில் படங்களில் இடம்பெறும் ‘பேய்’களின் கூச்சல் போன்றும் பீரங்கிகள் நெருங்குவது போன்றும் பியானோ கருவியைச் சினங்கொண்ட குரங்கு மிதிப்பது போன்றும் பலவிதமான ஓசைகளை வடகொரியா ஒலிபரப்புவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு ஓசைகள் கேட்பதாகக் கூறும் இவர்கள், இதனால் இரவில் சரிவர உறங்க முடிவதில்லை; பிள்ளைகள் வெளியில் விளையாடுவதில்லை; கதவு, சன்னல்களை மூடியே வைத்தாலும் இரைச்சலிலிருந்து தப்பிக்க இயலவில்லை என்கின்றனர்.

அன்றாடம் 10 முதல் 24 மணி நேரம் வரை வடகொரிய ஒலிபெருக்கிகள் அலறுகின்றன. குண்டு வீசுவதுபோல் இந்த ஒலிபெருக்கிகள் பரப்பும் இரைச்சல் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. இதற்கொரு முடிவு உண்டா என்றும் தெரியவில்லை என்று புலம்புகின்றனர் டங்சான் கிராமவாசிகள்.

முன்பெல்லாம் ஒலிபெருக்கிகள் அவமதிப்புகளையும் பிரசாரப் பாடல்களையும்தான் ஒலிபரப்பின. அதாவது மனிதக் குரல் என்பதால் தாங்கிக்கொண்டோம். ஆனால் இப்போது நிலைமை மோசமாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.

1950 முதல் 1953 வரையிலான கொரியப் போர் முடிவுற்ற பிறகு அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களும் சினமூட்டும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

வடகொரியாவிலிருந்து தப்பித் தென்கொரியாவில் வசிப்போர் பலூன்கள் வழியாக வடகொரியத் தலைவர் கிம்மைக் கொலைகாரச் சர்வாதிகாரி என்றும் பன்றி என்றும் குறிப்பிட்டு அனுப்பும் பிரசாரத் துண்டுப் பிரசுரங்கள் பியோங்யாங்கின் சினத்தைத் தூண்டியுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பதிலுக்குக் குப்பைகள் நிரம்பிய பலூன்களை அனுப்பியது வடகொரியா.

அதையடுத்து, ஆறு ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த ஒலிபெருக்கிப் பிரசாரத்தை மீண்டும் தொடங்கியது தென்கொரியா. ‘கே-பாப்’ பாடல்களும் செய்திகளும் அதில் ஒலிபரப்பப்பட்டன. அதை எதிர்த்து பிரசாரங்களுக்குப் பதில் பேரிரைச்சலை ஒலிபரப்புகிறது வடகொரியா.

இருதரப்பு அரசியல் பகைமையால் தாங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்