கோலாலம்பூர்: இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு மீட்பு, தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் ஏறக்குறைய 2,500 படகுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையின் ஒருங்கிணைப்பில் மாநில, மாவட்ட அதிகாரிகள் இணைந்து இந்த முன்னேற்பாடுகளைச் செய்துள்ளதாகத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி வியாழக்கிழமை (நவம்பர் 19) மக்களவையில் தெரிவித்தார். குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ரஸாலி வான் நூர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மீட்புப் பணிகளுக்காக 2,000க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 1,100க்கும் மேற்பட்ட லாரிகள், 28 வானூர்திகள், 35,000க்கும் மேற்பட்ட உயிர்காப்பு அங்கிகள் ஆகியவை தயாராக உள்ளன. மேலும், நாடு முழுவதும் 3,045 வெள்ள அபாயப் பகுதிகளும் 31 நிலச்சரிவு அபாயப் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பொதுப்பணித் துறை, நீர்ப்பாசன, வடிகால் துறை ஆகியவற்றின் சார்பில் 300 நடமாடும் நீரேற்று இயந்திரங்கள், 30 மின்னாக்கிகள், 15 கிரேன் லாரிகள், ஏழு தற்காலிக பெய்லி பாலங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவருமான டாக்டர் ஸாஹிட் கூறினார்.
