மலேசியாவிற்கான நார்வேயின் ஏவுகணை உரிமம் ரத்து

மலேசியாவிற்கான நார்வேயின் ஏவுகணை உரிமம் ரத்து

2 mins read
60bd529f-ebdb-4260-ae0f-b74219d4cbeb
பேராக் மாநிலம், லுமுட்டில் உள்ள பௌஸ்டெட் கடற்படைக் கப்பற்பட்டறையில் கட்டப்பட்டு வரும் ஒரு கடலோரப் போர்க் கப்பல். - கோப்புப் படம்: ஹிஷாமுதீன் ஹுசைன் ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: மாறிவரும் உலகளாவிய பாதுகாப்புச் சூழலுக்கு மத்தியில், தனது மிகவும் முக்கியமான சில பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, மலேசியாவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த கடற்படைத் தாக்குதல் ஏவுகணை அமைப்பு தொடர்பான ஏற்றுமதி உரிமங்களை நார்வே ரத்து செய்துள்ளது என அதன் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

“மலேசியாவிற்குக் குறிப்பிட்ட சில தற்காப்புத் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான சில உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்துகிறது,” என நார்வே வெளியுறவு அமைச்சு கூறியதாக, வியாழக்கிழமை (மே 14) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளியான ஊடக அறிக்கைகள் மேற்கோள் காட்டியுள்ளன.

“இது முற்றிலும் நார்வேயின் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றியதால் ஏற்பட்டது. மேலும் இது மலேசியாவைப் பாதிக்கிறது என்பது வருந்தத்தக்கது,” என்று மலேசிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

பிரதமரின் கண்டனம்

முன்னதாக, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோயருடன் தொலைபேசியில் உரையாடியபோது, ​​ஏற்றுமதி அனுமதிகளை ரத்து செய்வதற்கான நார்வேயின் ‘ஒருதலைப்பட்சமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு’ என்று அவர் விவரித்ததற்குத் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

“மலேசியா 2018ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு கடமையையும் மிகக் கவனமாகவும், உண்மையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் நிறைவேற்றியுள்ளது,” என்று திரு அன்வார் தமது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.

“நார்வே, எங்களுக்கு அதே மரியாதையையும் நல்லெண்ணத்தையும் காட்ட வேண்டிய கட்டாயத்தை உணரவில்லை என்று தெரிகிறது.

“நார்வேயின் இந்த நடவடிக்கை, மலேசியாவின் தற்காப்பு செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் அதன் கடலோரப் போர்க் கப்பல் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வட்டாரச் சமநிலையில் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும்,” என்று திரு ஸ்டோயரிடம் கூறியதாக பிரதமர் அன்வார் மேலும் கூறினார்.

“கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்கள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய ஆவணங்கள். அவை தங்கள் விருப்பம்போல சிதறடிக்கப்படும் காகிதத் துண்டுகள் அல்ல,” என்றார் அன்வார்.

ஐரோப்பிய தற்காப்பு விநியோகிப்பாளர்கள் எந்தவித தண்டனைக்கும் உட்படாமல் தங்கள் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கும் உரிமையைத் தங்களுக்குள் வைத்துக் கொண்டால், உத்திபூர்வப் பங்காளிகள் என்ற வகையில் அவர்களின் மதிப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்றும் திரு அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்