ஜார்ஜ் டவுன்: நாய்கள் சண்டைபோடும்போது அவற்றின் உரிமையாளர் அதனைத் தடுத்து நிறுத்தத் தவறினால், அது, விலங்கு நலச் சட்டத்தின்கீழ் குற்றமாகாது என பினாங்கு கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
தஞ்சோங் பூங்காவில் உள்ள பேர்ல் ஹில் பகுதியில் இரண்டு நாய்களுக்கு இடையே நடந்த சண்டை தொடர்பான புகார், காணொளிப் பதிவுகளை ஆய்வு செய்த பின்னர் அந்தத் துறை இவ்வாறு தெரிவித்துள்ளது.
“ஒரு விலங்கு சண்டையிடுவதையோ அல்லது அச்சண்டையை நிறுத்தத் தவறுவதையோ குற்றமாக்கும் தெளிவான சட்டப்பிரிவு விலங்கு நலச் சட்டத்தின்கீழ் இல்லை,” என்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.
இருந்தாலும், ஒரு நபர் ஒரு விலங்கைத் தாக்குவதற்கு தூண்டினார் அல்லது ஊக்குவித்தார் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், சிறு தண்டனைக் குற்றச் சட்டம் 1955, பிரிவு 8ன் கீழ் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படலாம் என்று கால்நடை பராமரிப்புத் துறை கூறியது.
முறையான காரணமின்றி, ஒரு நபர், நாயையோ, பிற விலங்கையோ வேறு ஒரு நபரையும் அல்லது விலங்கையும் தாக்குவதற்கோ, பயமுறுத்துவதற்கோ தூண்டினால் அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று அச்சட்டப்பிரிவு கூறுகிறது.
இதனால், ஒரு விலங்கைத் தாக்குவதற்கு யாரேனும் தூண்டியதற்கான ஆதாரங்கள் இருந்தால் காவல்துறையிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று அத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாய் ஒன்று, அளவில் சிறிய தெருநாயைத் தாக்கும் காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்தக் காணொளியில், தாக்கும் நாய் மீண்டும் மீண்டும் தெருநாயைக் கடித்துக் குதறியபோது, அதன் உரிமையாளர் நாயின் சங்கிலியைப் பிடித்தபடி நிற்பது பதிவாகியிருந்தது.
இச்சம்பவம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) நடந்ததாக நம்பப்படுகிறது.
‘டிம்’ என செல்லமாக அழைக்கப்படும் அந்தத் தெருநாய் தப்பிக்கப் போராடிய வேளையில் ஒரு பெண் நீண்ட குச்சியுடன் வந்து தாக்கிய நாயை விரட்டியடித்தார்.


