மறைக்க ஒன்றுமில்லை: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி

மறைக்க ஒன்றுமில்லை: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி

2 mins read
38e3f2d9-f1f8-4499-9491-f9bdc5fb5c51
எந்தவொரு விசாரணைக்கும் தயார் என்கிறார் அஸாம் பாக்கி. - படம்: என்எஸ்டிபி

புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்(எம்ஏசிசி) தலைவரான அஸாம் பாக்கி, தனது நிறுவனப் பங்குகள் குறித்து அரசாங்கம் அமைக்கும் எந்தவொரு விசாரணைக் குழுவின் விசாரணைக்கும் தயார் என்று கூறியுள்ளார்.

முழுமையான வெளிப்படையான விசாரணைக்குத் தயாராக இருப்பதாகவும் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் தனது நிதி மற்றும் சொத்துகள் பொதுச்சேவை விதிமுறைகளின்படியும் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரபூர்வ வழிகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதனை அவர் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்ததாக என்எஸ்டி செய்தி வெளியிட்டிருந்தது.

ஆதாரங்களின் அடிப்படையில், நீதி மற்றும் சட்டத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப உண்மைகளைக் கண்டறிய எந்தவொரு வெளிப்படையான, சுயேச்சையான விசாரணை நடைமுறைகளை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

அத்தகைய அணுகுமுறை தனது தனிப்பட்ட நேர்மையைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்லாமல், எம்ஏசிசி மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும் முக்கியமானது என்று அஸாம் சொன்னார்.

“நியாயமான மற்றும் சுயேச்சை செயல்முறை மூலம் உண்மை வெல்லும், யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்லர். அதேபோல், கருத்து அல்லது ஊடகக் கதைகளின் அடிப்படையில் மட்டுமே யாரையும் மதிப்பிடக்கூடாது,” என்றார் அவர்.

எம்ஏசிசி தொடர்பிலான புளூம்பெர்க்கில் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அஸாம் பாக்கி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் ஊழல் குற்றச்சாட்டுகளில் அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஊழலுக்கு எதிரான சி4 என்ற அமைப்பு, நாட்டின் முக்கிய ஊழல் தடுப்பு அமைப்பில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளைக் குற்றச்சாட்டுகள் காட்டுவதாகவும் உடனடியாக நாடாளுமன்ற விவாதம், சுயேச்சை விசாரணை உள்ளிட்ட உடனடித் தலையீடு தேவைப்படுவதாகவும் அறிக்கை கூறியிருந்தது.

இந்த அறிக்கை வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வெளியிடப்பட்டது. பல எம்ஏசிசி அதிகாரிகள் நிறுவன நிர்வாகிகளுக்கு எதிராக மிரட்டும் தந்திரங்களை கையாண்டு அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திரு அஸாம் கடந்த காலங்களில் நிறுவனங்களில் வைத்திருந்த பங்குகள் குறித்து தற்போது குறைகூறல்கள் எழுந்துள்ளன. அதன் மதிப்பு ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை அஸாமும் ஆணையமும் மறுத்துள்ளன.

குறிப்புச் சொற்கள்