சவூதி அரேபியாவுடன் அணுசக்தி உடன்பாடு: அமெரிக்கா அறிவிப்பு

சவூதி அரேபியாவுடன் அணுசக்தி உடன்பாடு: அமெரிக்கா அறிவிப்பு

2 mins read
a669648d-1cf9-4a8a-a952-f35c8e90b329
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துரைத்து வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் பொது அணுசக்தி உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டுள்ளன.

அதன்படி, அமெரிக்க தொழில்நுட்பத்தைக் கொண்டு சவூதி அணுவுலைகளைக் கட்டவும் யுரேனியத்தைச் செறிவூட்டவும் அனுமதி அளிக்கப்படும். அதன் விவரங்களை அமெரிக்க எரிசக்தித் துறை புதன்கிழமை (ஜூலை 22) அறிவித்தது.

சவூதி அரேபியாவுடன் அமெரிக்கா நெடுநாள்களாக பொது அணுசக்தி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ளது. அதிபர் டோனல்ட் டிரம்ப் முதன்முறை அதிபராகப் பதவி வகித்தபொஒது தொடங்கி, முன்னாள் அதிபர் ஜோ பைடன் பதவிக் காலம் வரையில் இருதரப்பின் கூட்டுச் செயல்பாடுகள் நிகழ்ந்து வந்தன.

ஆயினும், முன்னாள் அதிபர் ஜோ பைடன் திட்டப்படி வகுக்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பு அரண்கள் இம்முறை ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக அணுசக்தி அமைப்பு எந்நேரத்திலும் அறிவிப்பில்லாமல் சோதனைகள் மேற்கொள்ளும் அனுமதி இம்முறை செய்யப்படவுள்ள ஒப்பந்தத்தில் உள்ளடங்கவில்லை.

ஆகவே, சவூதி அரேபியா யுரேனியத்தைச் செறிவூட்டவும், அணுசக்தித் தயாரிப்பில் கிடைக்கும் கழிவுகளை மறுபயனீடு செய்யவும் இது வாய்ப்பளிக்கும். இந்த இரு செயல்பாடுகளும் அணு ஆயுதத்தை அந்நாடு தயாரிக்க வழியமைக்கலாம்.

இதேபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் 2009ஆம் ஆண்டில் செய்தபோது, யுரேனியச் செறிவுட்டலையும் அதன் கழிவுகளை மறுபயனீடு செய்வதையும் தவிர்ப்பதற்கு ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஒப்புதல் அளித்திருந்தது.

சவூதி அரேபியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வேளையில், ‘123 ஒப்பந்தம்’ என்ற இந்த அணுசக்தி உடன்பாடும் செய்துகொள்ளப்பட்டது.

அதில் அமெரிக்க எரிசக்தித் துறையின் செயலாளர் கிறிஸ் ரைட்டும் சவூதி அரேபிய எரிசக்தித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் இளவரசர் அப்துல் அசிஸ் சல்மானும் கையெழுத்திட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காசவூதி அரேபியாஅணுசக்திஒப்பந்தம்உடன்பாடுமத்திய கிழக்கு