தோக்கியோ: உலகிலேயே ஆக ஆதிக வயதுடைய முதியோர்களின் வாழ்விடமாக ஜப்பான் முன்னிலை வகிக்கிறது.
பொதுச் சுகாதாரத்தில் மேம்பாடு, ஆரோக்கிய வாழ்க்கைமுறை, சிறந்த மருத்துவப் பராமரிப்பு, உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை அந்நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை கூடிவருவதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில் முதியோர் பராமரிப்புக்கான செலவும் அங்கு அதிகமாகி வருவதும் பலரது கவனத்தை ஈர்த்துவருகிறது.
பல ஆண்டுகளாக நூறு வயதைத் தாண்டி ஜப்பானில் வாழ்வோரின் மொத்த எண்ணிக்கை கணிசமாக வளர்ந்து வந்துள்ளது. அந்த வயதினர் சார்ந்த கணக்கெடுப்பு 1963ல் தொடங்கியது. அப்போது 163 என்றிருந்த நூற்றாண்டைக் கடந்தோரின் எண்ணிக்கை 1998ல் 10,000 ஆகியது.
இவ்வாண்டு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) நிலவரப்படி, அது 107,677 என்று சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவர்களில் 88 விழுக்காட்டினர் பெண்கள் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்த்தல், விபத்துகளில் சிக்காமல் இருத்தல் ஆகியன அதற்கான காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாட்டு அமைப்பு உலக அளவில் ஏறத்தாழ 672,000 நபர்கள் நூறு வயதைக் கடந்து வாழ்ந்து வருவதாகக் கணித்துள்ளது. அவர்களில் பலர் ஜப்பானில்தான் வாழ்கின்றனர் எனவும் அது தெரிவித்துள்ளது.
