லா பிளாட்டா, அர்ஜென்டினா: அர்ஜென்டினா மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாசுபட்ட மருந்து காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி, 100க்கும் அதிகமாக அதிகரித்ததாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு உள்ளூர் மருந்தகம் மெதுவாக நடவடிக்கை எடுத்தது குறித்து மக்களிடையே சீற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதத்திலிருந்து, நான்கு மாநிலங்களிலும் தலைநகர் பியூனஸ் அயர்சிலும் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஃபென்டனில் கலந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மருந்துகளுடன் எத்தனை இறப்புகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்பதை அர்ஜென்டினா தீர்மானிக்க முயன்று வருகிறது.
எச்எல்பி பார்மா குழும உரிமையாளர் ஏரியல் ஃபுர்ஃபாரோ கார்சியா, “100க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்குக் காரணமான மாசுபட்ட ஃபென்டனில் தொகுப்பின் உற்பத்தியாளர்” என்று அர்ஜென்டின அதிபர் ஜேவியர் மிலேயின் செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விசாரணையைத் தொடர்ந்து, அர்ஜென்டினாவின் மருந்து ஒழுங்குமுறை நிறுவனமான அன்மட், மாசுகலந்த ஃபென்டனிலால் முதல் இறப்புகள் ஏற்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஆய்வகத்தை மூடிவிட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முதல் இறப்புகள் பதிவான பியூனஸ் அயர்சின் தெற்கே உள்ள லா ப்ளாட்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே, ஃபென்டனிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான பியூனஸ் அயர்சில் செப்டம்பர் 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஏஎஃப்பி செய்தி கூறுகிறது.